2013-09-16 16:12:15

உரோமை மறைமாவட்டக் குருக்களுடன் உரோமை ஆயரின் சந்திப்பு


செப்.16,2013. திருத்தந்தையின் எளிமையும், மக்களுடன், குறிப்பாக, ஏழைகளுடன் நெருங்கிவர விழையும் அவரது ஆவலும், அவர் மக்களுடன் நேரடியாகப்பேச விழைவதும், தவறுகளைத் துணிவுடன் கண்டிப்பதும், அனைவரின் இதயங்களையும் தொட்டுள்ளதாக அறிவித்தார் கர்தினால் Agostino Vallini.
உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, உரோம் மறைமாவட்ட குருக்களை புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் சந்திக்கச் சென்றபோது அளித்த வரவேற்புரையில் இவ்வாறு கூறினார் அம்மறைமாவட்டத்திற்கான திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் Vallini.
திருஅவை மீது அக்கறையின்றி, அதிலிருந்து ஒதுங்கியிருக்கும் இக்கால மக்களிடையே நற்செய்திப்பணியை ஆற்றவேண்டிய கடமை உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை, காலத்தின் அருங்குறியாக திருத்தந்தையிடமிருந்து தாங்கள் கற்றுக்கொள்வதாக மேலும் கூறினார் கர்தினால் Vallini.
திருத்தந்தை வழங்கிவரும் ஊக்கத்தினால் பலம்பெற்றவர்களாக தங்கள் மேய்ப்புப்பணி கடமைகளை திறமுடன் ஏற்றுநடத்த அனைத்து மேய்ப்பர்களும் உறுதிவழங்குகின்றனர் என்று திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார் கர்தினால் Vallini.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.