2013-09-16 16:10:04

ஆட்சியில் இருப்போருக்காகச் செபிப்பது கத்தோலிக்கரின் கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.16,2013. ஆட்சியில் இருப்போர், முதலில் மக்கள் மீது அன்புகொள்ளவேண்டும்; அன்பில்லாமல், அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தும் தலைவர்கள், மக்களை அடக்க முடியுமேதவிர, உண்மையில் அவர்களை ஆளுமை செய்யமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்களன்று காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, நற்செய்தியில், நூற்றுவர் தலைவர் ஒருவர் தன் பணியாளரைக் குணமாக்க இயேசுவிடம் விண்ணப்பித்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு மறையுரை வழங்கினார்.
என் மக்களை நான் உண்மையில் அன்பு செய்கிறேனா என்பதும், என் மக்களை வழிநடத்த, நான் உண்மையிலேயே பணிவுள்ளம் கொண்டுள்ளேனா என்பதும், ஒவ்வொரு தலைவரும் தனக்குள்ளே எழுப்பவேண்டிய முக்கியமான கேள்விகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
ஏனையோரே ஆட்சி செய்கின்றனர், அவர்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கிறிஸ்தவர்கள் விலகிச் செல்லக்கூடாது, ஏனெனில் பொதுநலனில் அக்கறை கொள்ளவேண்டும் என்பதையே கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் வலியுறுத்தி வருகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஒரு நல்ல கத்தோலிக்கர் அரசியலில் தலையிடக்கூடாது என்று சொல்வது தவறு என்று கூறியத் திருத்தந்தை, ஆட்சியில் இருப்போருக்காகச் செபிக்கவேண்டும் என்பதை புனித பவுல் அடியார் நமக்கு அறிவுரையாக வழங்கியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.
ஆட்சியில் இருப்போரை எப்போதுமே தாக்கிவரும் ஊடகங்களின் பாணியில் செல்வதற்குப் பதிலாக, தவறு செய்யும் தலைவர்களின் மன மாற்றத்திற்காகவும், நல்ல ஆட்சி அமைவதற்கும் செபிப்பது உண்மையான கத்தோலிக்கரின் கடமை என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.