செப்.14,2013. மனிதர்களிடம் எயிட்ஸ் நோயை தோற்றுவிக்கும் எச்ஐவி நுண்கிருமி தொற்றை முற்றாக
அழிக்கவல்ல சோதனை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ
ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். மனிதர்களின் எச்ஐவி தொற்றைவிட நூறுமடங்கு அதிக வீரியம்
மிக்க எஸ்ஐவி நுணகிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளின்வழி
இந்த வெற்றி காணப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக
அறிவியலாளர்கள், எஸ்ஐவி நுண்கிருமி தொற்றுக்குள்ளான 16 குரங்குகளுக்கு தங்களின் புதிய
தடுப்பு மருந்தை அளித்ததில், ஒன்பது குரங்குகளிடம் இருந்த எஸ்ஐவி தொற்று முற்றாக இல்லாமல்
போய்விட்டதாகவும், மற்ற ஏழு குரங்குகளிடம் தங்களின் தடுப்பு மருந்து செயற்படவில்லை என்றும்
தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட 16 குரங்குகளில் ஒன்பது குரங்குகளின் உடலில் எஸ்ஐவி வைரஸ்
தொற்று முற்றாக இல்லாமல் போய்விட்டது என்பது ஒரு முக்கிய, நம்பிக்கையளிக்கக்கூடிய சாதனை
என்ற அறிவியலாளர்கள், தங்களின் புதிய, நுண்கிருமி ஒழிப்பு வழிமுறை, சில குரங்குகளின்
உடலில் ஏன் செயல்படவில்லை என்பதற்கான விடை கிடைக்கும்போது, எச்ஐவி தொற்றை முழுமையாக குணப்படுத்த
இயலும் என தெரிவித்துள்ளனர்.