2013-09-14 17:52:43

மத்திய ஆப்ரிக்க குடியரசில் மோதல்களை நிறுத்தஆயர் பேரவை அழைப்பு


செப்.14,2013. மத்திய ஆப்ரிக்க குடியரசில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு அனைத்துலக சமுதாயம் உதவவில்லையெனில், அந்நாடு இரண்டாக உடைந்துபோகும் ஆபத்து உள்ளது என தன் கவலையை வெளியிட்டுள்ளது அந்நாட்டு ஆயர்பேரவை.
தங்களைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற, கிறிஸ்தவர்கள் பாதுகாப்புக்குழுக்களை அமைத்துவரும் அதேவேளையில், அண்மையில் சில இஸ்லாமியர்கள் கொலைச்செய்யப்பட்டுள்ளது, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளது என்ற மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆயர் பேரவையின் பொதுச்செயலர் அருட்பணி Cyriaque Gbate Doumalo, நாட்டைக் காப்பாற்ற அனைத்துலக சமூகத்தின் தலையீடு இன்றியமையாதது என்றார்.
மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் Bossangoa நகருடன் அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நகர் ஆயரை தொடர்புகொள்ளமுடியாத நிலை தொடர்வதாகவும் கவலையை வெளியிட்டார் அருள்பணி Doumalo.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான மோதல்களில் பல ஆலயங்களும், இரண்டாயிரத்திற்கும் மேலான வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயர் பேரவையின் பொதுச்செயலர் மேலும் கூறினார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.