2013-09-14 16:04:48

பொதுக்காலம் - 24ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 செப்டம்பர் 8, 15 ஆகிய இரு தேதிகளும் அன்னை மரியாவின் திருவிழா நாட்கள். செப்டம்பர் 8 - மரியன்னையின் பிறந்த நாள்... (புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருவிழா). செப்டம்பர் 15 - துயருறும் அன்னை மரியாவின் திருநாள். இவ்வாண்டு, செப்டம்பர் 8, 15 ஆகிய இரு தேதிகளும் ஞாயிற்றுக்கிழமைகள் என்பதால், அன்னையின் திருவிழாவை மையப்படுத்த வாய்ப்பில்லாமல் போயிற்று. இருப்பினும், நலம்தரும் அன்னை மரியாவையும், துயருறும் அன்னை மரியாவையும் எண்ணிப்பார்க்க இன்றைய உலகச்சூழல் நம்மைத் தூண்டுகிறது. நலம் தருதல், துயர் உறுதல் என்ற இரு கோணங்களில் அன்னை மரியாவின் திருநாள்கள் தொடர்ந்து வருவது நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது. தான் எவ்வளவுதான் துயருற்றாலும் தன் குழந்தைகளுக்கு நலம் தருவது தாய்மையின் ஒரு தலை சிறந்த பண்பு. இதனை நமக்கு நினைவுறுத்தவே இவ்விரு திருநாள்களும் ஒன்றையொன்று தொடர்ந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தத் தாய்மைப் பண்புக்கு எதிர் முனையில் இவ்வுலகம் இருப்பதுபோன்ற செய்திகளை நாம் கேட்டு வருகிறோம். துயர் தருவதிலும், நலம் மறுப்பதிலும் உலக அரசுகள் மும்முரமாக இருப்பதைப் போன்ற நிலை நம்மைச்சுற்றி உருவாகியிருக்கிறது. இந்நிலைக்கு ஒரு மாற்றாக, ஒப்புரவை, மன்னிப்பை, அமைதியை உலகில் நிலைநாட்ட திருத்தந்தை பிரான்சிஸ் போன்ற பல உன்னதத் தலைவர்களும் முயன்றுவருவதைக் கண்டு மனம் ஓரளவு நம்பிக்கை கொள்கிறது.
சிரியா நாட்டின் அமைதிக்காக செபிக்கும்படி கடந்த வாரம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பினை ஏற்று, உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான கத்தோலிக்கர்களுடனும் திருத்தந்தையுடனும் இணைந்து உண்ணாநோன்பும், செபங்களும் மேற்கொண்டோம். சிரியாவைச் சூழ்ந்திருந்த போர் நெருக்கடியை அமைதி வழியில் வெல்வதற்கு செப்டம்பர் 7ம் தேதி மாலையில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருவிழிப்பு வழிபாட்டை திருத்தந்தை முன்னின்று நடத்தினார். இந்த வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு மதத்தினரும் கலந்துகொண்டு, உலக அமைதிக்காக, குறிப்பாக, சிரியாவில் அமைதி நிலவ செபங்களை எழுப்பியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
நலம்தரும் ஆரோக்கிய அன்னையின் திருநாளுக்கு முந்தின நாள், செப்டம்பர் 7ம் தேதி, உலகமெல்லாம் நலமடையவேண்டும் என்று திருத்தந்தையுடன் நாம் மேற்கொண்ட செபமுயற்சி, இவ்வுலகிற்கு ஓரளவு நலனை வழங்கியுள்ளது என்றே சொல்லவேண்டும். கடந்த ஒரு வாரமாக, ஆயுதத்தாக்குதல், அழிவு என்ற வன்முறைக் கருத்துக்களைப் பேசாமல், அரசியல் வழி தீர்வுகள், பேச்சு வார்த்தைகள் என்ற தொனியில் பல நாட்டுத் தலைவர்கள் சிந்திக்க முயன்றுவருவதற்காக இறைவனுக்கும், அன்னை மரியாவுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும். இருப்பினும், போர் மேகங்கள் இன்னும் முற்றிலும் நீங்கவில்லை. அமைதியைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் சிரியாவின் அப்பாவி மக்களையும், உலகின் பல நாட்டினரையும் இந்த ஞாயிறன்று நம் செபங்களில், சிந்தனைகளில் இறைவன் முன் மீண்டும் ஏந்தி வருவோம்.

செப்டம்பர் 15, இந்த ஞாயிறன்று துயருறும் அன்னை மரியாவின் திருநாள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் வேதனை அனுபவித்து, சிலுவையில் தன் மகன் இறந்தபோது, அன்னை மரியா சிலுவையடியில் நின்றார் என்று நற்செய்தி சொல்கிறது (யோவான் 19: 25). அந்த அன்னையின் வீரத்தைக் கொண்டாடும் திருநாள் இது. இறந்த தன் மகன் இறுதியாக அமைதியில் உறங்கும் வண்ணம் அவரது உடலை மடியில் தாங்கி அமர்ந்திருந்த அன்னை மரியாவின் தியாகத்தைக் கொண்டாடும் திருநாள் இது.
அன்னை மரியாவைப் போலவே துயரத்தின் சிகரத்தில் உறுதியுடன் நிற்கும் அன்னையரை, குறிப்பாக, சிரியாவிலும், ஏனைய நாடுகளிலும் தம் பிள்ளைகளை வன்முறைகளுக்கு ஒவ்வொரு நாளும் பலிகொடுத்து பரிதவிக்கும் அன்னையரைச் சிறப்பாக இன்று நினைவில் கொள்வோம்.

துயரங்கள் மிகுந்த சூழலிலும் நம்பிக்கையை வளர்க்கும் பொருள்மிகுந்த இத்திருநாளன்று, நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியும் பொருத்தமாகத் தெரிகிறது. லூக்கா நற்செய்தியின் 15ம் பிரிவில் காணப்படும் மூன்று உவமைகள், இன்றைய நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளன. காணாமற்போய் கண்டுபிடிக்கப்படும் மகிழ்வைப் பறைசாற்றும் உவமைகள் இவை. லூக்கா நற்செய்தியின் 15ம் பிரிவு, "நற்செய்திக்குள் ஒரு நற்செய்தி" என்று அழைக்கப்படுகிறது. காணாமற்போன ஆடு, காணமற்போன நாணயம், காணமற்போன மகன் என்ற இந்த மூன்று உவமைகளில், காணாமற்போன மகன் உவமை உலகப் புகழ்பெற்ற உவமை.
காணமற்போன மகன் உவமையை பலமுறை சிந்தித்திருக்கிறேன். என் சிந்தனைகள் எல்லாமே திருந்திவந்த மகன், அவரை ஏற்று விருந்தளித்த தந்தை, அதை ஏற்றுக் கொள்ளாத மூத்த மகன், அவரைச் சமாதானப்படுத்த முயன்ற தந்தை என்று இவ்வுவமையின் இரண்டாம் பகுதியில் என் கவனம் அதிகமாய் இருந்து வந்தது. இன்று, முதல் பகுதியில் நம் சிந்தனைகளை அதிகம் பகிர்வோம். இளைய மகனைப்பற்றி சிந்திப்போம்... அதுவும், மனம்மாறி திரும்பி வந்ததால், கண்டுபிடிக்கப்பட்ட மகனைவிட, காணாமல் போன மகனைப்பற்றி அதிகம் சிந்திப்போம். காணாமல் போவது என்ன என்பதை அறிய முயல்வோம்.
சிரியா போன்ற நாடுகளில் போர்ச் சூழல்களாலும், வேறுபல வேதனைகளாலும் தங்கள் வாழ்வின் ஆதாரங்கள் அனைத்தையும், தங்கள் உறவுகளையும் தொலைத்துவிட்டு வேதனையுறும் மக்களை முன்னிறுத்தி, காணாமல் போவது அல்லது, தொலைந்து போவதைக் குறித்துச் சிந்திக்க முயல்வோம்.

ஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர், அருள்பணியாளர் Ron Rolheiser. காணமற்போன மகன் உவமைக்கு அவர் தரும் விளக்கத்தில், காணாமல் போவதுபற்றி கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துள்ளார். அவரது சிந்தனைகளே என்னையும் இவ்வழியில் சிந்திக்கத் தூண்டின. 14வது வயதில் தன் வாழ்வில் நடந்தவைகளை Rolheiser இவ்வாறு கூறியுள்ளார்:
எனக்கு 14 வயது ஆனபோது, கோடை விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப்போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த ஒரு 20 வயது இளைஞன் என் வீட்டுக்கருகே வாழ்ந்தார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், பிற்காலத்தில் நானும் அவரைப்போல் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவர் தூக்கில் தொங்கி இறந்தார். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவர் வேலை செய்யும் இடத்தில், ஒரு விபத்தில் இறந்தார். வேறொரு நண்பர் குதிரை சவாரி பழகும்போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தார். இந்த மரணங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச் சடங்கில் நான் பீடச்சிறுவனாய் உதவி செய்தேன்.
வெளிப்படையாக, என் உலகம் மாறாதது போல் நான் காட்டிக்கொண்டாலும், என் உள் உலகம் சுக்குநூறாய் சிதறியது. இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னைவிட சோகமான, பரிதாபமான ஒரு 14 வயது இளைஞன் இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.
இந்தச் சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில் மெதுவாக, சப்தமில்லாமல் நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக்கிடந்த குறைகளோடு என்னையே நான் ஏற்றுக்கொள்ளவும் அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று ஒரு குருவாக இருப்பதற்கு அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில் காணாமற் போனதைப்போல் நான் உணர்ந்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.
ஆம், காணாமல் போவதன் வழியாக, பல உண்மைகளைக் கண்டுபிடிக்கலாம். முற்றிலும் காணாமல்போகும், முற்றிலும் நொறுங்கிவிடும் நிலைகள் நிரந்தர முடிவுகள் அல்ல. அந்த இருள், அந்த நொறுங்குதல் புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, காணாமல் போவதும் உதவி செய்யும்.

சரியாக பத்துநாட்களுக்கு முன், செப்டம்பர் 5ம் தேதி, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா அவர்கள் இறையடி சேர்ந்ததன் 16ம் ஆண்டை நினைவுகூர்ந்தோம். அந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்த இடத்தை இந்த அருளாளர் மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைப்பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கும். இப்படி நான் சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம். தொடர்ந்து கேளுங்கள்.
2007ம் ஆண்டு, "Mother Teresa - Come Be My Light" என்ற நூல் வெளியானது. அன்னை தெரேசா தனிப்பட்ட வகையில் எழுதி வைத்திருந்த எண்ணங்களைத் தொகுத்து Brian Kolodiejchuk என்பவர் இந்நூலை வெளியிட்டார். இந்நூலை நான் இதுவரை வாசித்ததில்லை. ஆனால், இதை வாசித்தவர்கள் அன்னை தேரேசாவைப் பற்றி அதிர்ச்சி அடைந்ததாக எழுதியுள்ளனர். தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள் அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவை இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன.
உயர்ந்த நிலையில் நாம் போற்றி மதிக்கும் மனிதர்கள் எவரும் கேள்விகள், குழப்பங்கள் இவற்றால் அலைகழிக்கப்படுவது கிடையாது என்று நாமே தீர்மானித்துக் கொள்கிறோம். ஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், அன்னை தெரேசா போன்ற அற்புத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்ட, இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்கமுடியும் என்பது விளங்கும். அதிலும் சிறப்பாக, அவர் செய்துவந்த பணியில், இந்த உலகத்தின்மீது நம்பிக்கையைக் குறைக்கும் துன்ப நிகழ்வுகளையே ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே.
இருள், துயரம், கலக்கம் இவைகளைச் சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆனால், அந்த நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப் புதைத்துக் கொள்வோர் நம்மில் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி உலகை ஒளி மயமாக்கினர்... அன்னை தேரேசாவைப் போல்.

நமது இன்றைய உவமையின் நாயகனிடம் திரும்பி வருவோம். பன்றிகள் நடுவே, பசியில் மயங்கிய இளையமகன் பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவைகள்தான் இனி தன் வாழ்வென்று விரக்தியடையாமல், "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்." (லூக்கா 15: 17-19) என்று எழுந்தாரே...அந்த நேரத்தில், காணாமற் போயிருந்த தன் வாழ்வை அவர் மீண்டும் கண்டெடுத்தார்.
காணாமல் போவதும், ஒரு வகையில் பார்க்கப்போனால், அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை வாழ்வில் நாம் கண்டும் காணாமல் ஒதுக்கிவைத்திருந்த பல உண்மைகளையும் விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும்.
சிலுவையில் அறையுண்டிருந்த இயேசு, தன் தந்தையைத் தொலைத்துவிட்டதைப் போல் உணர்ந்தார். தானும் காணாமற் போய்விட்டதைப் போல் உணர்ந்தார். இருப்பினும் இறுதியில் அந்த இறைவனை மீண்டும் கண்டுபிடித்து, அவர் கரங்களில் தன் உயிரை ஒப்படைத்தார். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் துயருறும் அன்னை மரியா, தன் மகன் அந்தச் சிலுவையில் தன்னையேத் தொலைத்துவிட்டு கதறிய அவலக்குரலை கேட்டிருப்பார். அவர் தன் மகனுக்காக இறைவனிடம் மன்றாடியிருப்பார்.
அந்த அன்னையின் பரிந்துரை வழியாக, சிரியாவிலும், இன்னும் பிற நாடுகளிலும் தங்கள் உடமைகள், உறவுகள், அமைதி என்று அனைத்தையும் தொலைத்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருக்கும் கோடான கோடி மக்கள், தாங்கள் தேடும் அமைதியைப் பெறவேண்டும் என்பதே நமது தொடர்ந்த செபமாக அமையட்டும்.








All the contents on this site are copyrighted ©.