2013-09-14 17:33:44

செபம் மற்றும் கண்ணீர் ஆகியவற்றின் வழியாக, சிலுவை என்ற மறையுண்மையை நெருங்கமுடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.14,2013. மனிதகுலத்தின் மிகப்பெரும் மறையுண்மை, சிலுவையின் மறையுண்மையே, அதனை செபம் மற்றும் கண்ணீருடனேயே நாம் அணுகமுடியும் என்று இச்சனிக்கிழமை காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருச்சிலுவையின் மகிமை விழாவை சிறப்பித்த இச்சனிக்கிழமையன்று காலை நிறைவேற்றிய திருப்பலியில், சிலுவையின் மகிமை என்பது மனித வரலாற்றையும், இறை வரலாற்றையும் உள்ளடக்கியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சிலுவை எனும் மரத்தால் வந்த மீட்பு, அன்பின் வழியாக வந்தது என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவின் பலியை கசப்பு கலந்த இனிய சுவையாக நம்மால் ஆழமாக உணரமுடியும் என்றார். நம் செபம் மற்றும் கண்ணீர் ஆகியவற்றின் வழியாக, இந்த மறையுண்மைக்கு நெருக்கமாக நாம் வரமுடியும் என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
நம் பாவங்களுக்காக மனம் வருந்தியும், மனிதகுல துன்பங்கள் கண்டும் நாம் கண்ணீர் விடவில்லையெனில், சிலுவை எனும் மறையுண்மையைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.