2013-09-14 17:34:04

எருசலேம் புனித கல்லறையின் காவல்படையினருக்கு திருத்தந்தையின் உரை


செப்.14,2013. திருப்பயணத்தில் தொடர்ந்து நடைபோடுதல், சமுதாயத்தைக் கட்டி எழுப்புதல், கிறிஸ்துவை அறிக்கையிடுதல் ஆகிய மூன்றும் நம்வாழ்வைச் சுற்றி அமையவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'எருசலேம் புனித கல்லறையின் காவல்படையினர்' என்ற கத்தோலிக்க அமைப்பின் உறுப்பினர்களை இவ்வெள்ளியனறு மாலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வுலகில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரு திருப்பயணத்தின் அனுபவத்தை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
இத்திருப்பயணத்தில் சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்முடைய ஆழமான நம்பிக்கையை வெளியிடுவதன் வழியாகவே, கட்டியெழுப்புவதற்கான நம் பயணம் பிறக்கிறது என்றும் கூறினார்.
'எருசலேம் புனித கல்லறையின் காவல்படையினர்' என்ற இக்குழு, புனித பூமியில் ஆற்றிவரும் பணிகளையும், ஏழைகளிடையே இக்குழு மேற்கொண்டுள்ள பிறரன்புப் பணிகளையும் பாராட்டியத் திருத்தந்தை, புனித பூமியின் கத்தோலிக்கச் சமுதாயத்தின் இன்றைய நிலை குறித்து, உரோம் நகரில் இக்குழுவினரால் நடத்தப்படவிருக்கும் கருத்தரங்கிற்குத் தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.