2013-09-13 16:02:45

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆறு மாதங்கள் பணியைக் குறித்து திருப்பீடப் பேச்சாளர்


செப்.13,2013. ஏழ்மை, அமைதி, இயற்கையின் பாதுகாப்பு என்ற மூன்று எண்ணங்களை உள்ளடக்கிய 'பிரான்சிஸ்' என்ற பெயர் உலகினர் அறிந்த பெயர்தான் என்றாலும், அப்பெயரைத் தெரிவு செய்ததன் வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப்பணியின் அடிப்படையை உலகிற்கு எடுத்துரைத்தார் என்று திருப்பீடப் பேச்சாளரும், வத்திக்கான் வானொலி நிலையத்தின் இயக்குனருமான அருள்பணியாளர் Federico Lombardi கூறினார்.
இவ்வாண்டு மார்ச் 13ம் தேதி முதல், செப்டம்பர் 13, இவ்வெள்ளியன்று நிறைவுறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆறு மாதங்கள் பணியைக் குறித்து, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் அருள்பணியாளர் Lombardi இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுத்த பெயர், ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து வந்த திருத்தந்தை என்ற மாற்றம், தனக்குள்ளேயே தங்கிவிடாமல் வெளியில் செல்லவெண்டியத் திருஅவை என்று திருத்தந்தை வழங்கிவரும் செய்திகள் என்ற இந்த மூன்று அம்சங்கள் இந்த முதல் ஆறு மாதங்களின் முக்கிய அம்சங்கள் என்று அருள்பணியாளர் Lombardi எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களும் நட்புறவுடன் பழகுவதை இவ்வுலகம் கண்டு வருகிறது என்பதையும் அருள்பணியாளர் Lombardi தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொற்களைவிட, அவரது செயல்பாடுகளும், வாழ்வு முறையும் தெளிவானச் செய்திகளை உலகிற்கு அறிவித்து வருவதால், திருப்பீடத்தின் பேச்சாளர் என்ற முறையில் தனது பணி மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது என்பதையும் அருள்பணியாளர் Lombardi எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.