2013-09-13 16:00:54

குடும்பம் என்பது ஏட்டளவு கருத்து மட்டுமல்ல, மாறாக, ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் அடிப்படை உண்மை - திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.13,2013. வயது முதிர்ந்தோரையும், இளையோரையும் புறக்கணிக்கும் எந்த ஒரு நாடும் எதிர்காலத்தை இழக்கிறது, ஏனெனில் அது பாரம்பரிய நினைவுகளையும், எதிர்காலத்தின் கனவுகளையும் சிதைக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
செப்டம்பர் 12 இவ்வியாழன் முதல் 15, இஞ்ஞாயிறு முடிய இத்தாலியின் Turin நகரில் நடைபெறும் 47வது இத்தாலிய கத்தோலிக்கர் சமுதாய வாரம் என்ற கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுநிலையினர் தலைவர்களில் ஒருவரான Giuseppe Toniolo அவர்கள், 1907ம் ஆண்டு சமுதாய வாரம் என்ற முயற்சியைத் துவக்கிவைத்த வரலாற்றை நினைவுகூர்ந்த திருத்தந்தை, Toniolo அவர்கள், கடந்த ஆண்டு முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்பட்டபின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவென்பதையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
போதுநிலையினருக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுவதற்கு முன்னரே, இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சியைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டியுள்ளார்.
Turin நகரில் நடைபெறும் சமுதாய வார நிகழ்வுகளுக்கு "குடும்பம், இத்தாலிய சமுதாயத்தின் நம்பிக்கையும், எதிர்காலமும்" என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமானது என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளத் திருத்தந்தை, குடும்பம் என்பது வெறும் ஏட்டளவு கருத்து மட்டுமல்ல, மாறாக, அதுவே ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் அடிப்படை உண்மை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இந்த முயற்சியை முன்னின்று நடத்தும் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Angelo Bagnasco அவர்களையும், ஏனைய ஆயர்களையும் போதுநிலைத் தலைவர்களையும் வாழ்த்தி, அவர்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாக இச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.