2013-09-13 16:09:58

காங்கோ குடியரசு நாட்டில், இராணுவத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டிருந்த 550க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர்


செப்.13,2013. ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசு நாட்டில், Katanga மாநிலத்தில் இராணுவத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டிருந்த 550க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடந்த ஐந்து மாதங்களில் விடுவிக்கப்பட்டனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
UNICEF மற்றும் ஏனைய சமுதாய அமைப்பினர் அப்பகுதியில் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதத் துவக்கம் வரை 557 சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அலுவலகம் இவ்வியாழனன்று அறிவித்தது.
இவர்களில் 113 சிறுவர்கள் அவர்களுடைய குடும்பங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஏனைய 444 சிறுவர்கள் பாதுகாப்பு மையங்களில் பாராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் ஐ.நா. உயர் அதிகாரி Leila Zerrougui அவர்கள் கூறினார்.
இந்த முயற்சி மகிழ்வை அளித்தாலும், காங்கோ குடியரசில் இன்னும் பல்லாயிரம் சிறுவர்கள் கட்டாய இராணுவப் பயிற்சிகளிலும், பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று Zerrougui அவர்கள் கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.