2013-09-13 16:00:17

ஒருவரின் குறையை அவரிடம் எடுத்துச் சொல்லவேண்டுமே தவிர, மற்றவர்களிடம் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.13,2013. “நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?” (லூக்கா 6:41) என்று இயேசு கேட்ட கேள்வி, ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கும் ஒரு கேள்வியாக அனைத்துக் காலங்களிலும் ஒலித்து வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளியன்று புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இயேசு எழுப்பிய இக்கேள்வியை மையப்படுத்தி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரைப் பற்றி மற்றவர்களிடம் புறம்பேசும் நம் போக்கினைக் குறித்து கேள்விகளை எழுப்பினார்.
ஒருவரிடம் குறை காணும்போது, அவருக்காகச் செபிக்கவும், அவருக்காக உடல் ஒறுத்தல்களை மேற்கொள்ளவும் நாம் முயலவேண்டும்; பின்னர் அவரது குறையை அவரிடம் எடுத்துச் சொல்லவேண்டுமே தவிர, மற்றவர்களிடம் அல்ல என்பதை திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
கிறிஸ்துவைப் பழித்துரைத்ததாகக் கூறும் புனித பவுலை எடுத்துக்காட்டாகக் கூறி, நாம் கடவுளைப் பழித்துரைக்காமல் இருக்கலாம், ஆனால் அடுத்தவரின் குறைகளை நாம் பறைசாற்றும்போது, நாமும் பவுலைப் போல, திருஅவையைத் துன்புறுத்துகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
இத்தகையக் குறைபாட்டிலிருந்து திருஅவை முழுவதுமே விடுதலை பெற்று, பணிவு, கனிவு மற்றும் மென்மையான மனம் கொண்டு அனைவரும் வாழும் வரங்களைப் பெற செபிப்போம் என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் வெளியிட்டுவரும் Twitter செய்திகளில் ஒன்றாக, இயேசுவே ஆதவன், அந்த ஆதவனை அறிவிக்கும் உதயம் மரியன்னை என்ற Twitter செய்தியை இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.