2013-09-12 16:29:45

உலகெங்கும் வீணாக்கப்படும் 130 கோடி டன் எடையுள்ள உணவுப் பொருள்களால் பொருளாதார அழிவும் உருவாகிறது - ஐ.நா.அறிக்கை


செப்.12,2013. ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் வீணாக்கப்படும் 130 கோடி டன் எடையுள்ள உணவுப் பொருள்களால் 75,000 கோடி டாலர்கள் அளவுக்கு பொருளாதார அழிவும் உருவாகிறது என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
“வீணாகும் உணவு உலகில் பதிக்கும் தடங்கள்” என்ற தலைப்பில் இப்புதனன்று ஐ.நா.வின் மனித மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், உணவுப் பொருள்கள் வீணாவதால், சுற்றுச்சூழலும் பெருமளவு பாழாகிறது என்று கூறப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்களை உருவாக்குவதற்கு, பெருமளவு நீர் பயன்படுத்தப்படுவதால், அந்த உணவு உண்ணப்படாமல் எறியப்படும்போது, இரஷ்யாவில் ஓடும் Volga என்ற பெரும் நதியில் ஓராண்டு ஓடும் அளவு நீர் வீணாக்கப்படுகிறது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதேபோல், உலகில் வீணாக்கப்படும் உணவு, 1400 கோடி ஹெக்டேர் நிலத்தில் பயிராகும் உணவுக்கு இணையானது என்ற தகவலையும் இவ்வறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகில் 87 கோடி மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்ற நிலையில், நாம் தயாரிக்கும் உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பகுதி வீணாகிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று உலக உணவு வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர் José Graziano da Silva கூறினார்.
'சிந்திப்பீர், உண்பீர், சேமிப்பீர் - உணவுத் தடங்களைக் குறைப்பீர்' (‘Think Eat Save - Reduce Your Foodprint!’) என்பது இவ்வாண்டு ஐ.நா. விடுத்துள்ள ஓர் அழைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.