2013-09-12 16:15:58

அன்னையின் பெயர் என்றும் நமக்கு இனிமையாகவே விளங்குகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.12,2013. நற்செய்தி நம்முன் கடினமான சவால்களை வைக்கின்றது; அவற்றைக் கடைபிடிக்க விழைவோர் அன்னைமரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
செப்டம்பர் 12, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட அன்னை மரியாவின் புனிதப் பெயர் திருவிழாவன்று, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் காலைத் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இத்திருநாளைக் குறித்து தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
அன்னை மரியாவின் புனிதப் பெயர் திருவிழாவென்று தற்போது அழைக்கப்படும் இந்நாள், துவக்கத்தில் அன்னை மரியாவின் இனியப் பெயர் திருவிழா என்றே அழைக்கப்பட்டது என்று கூறியத் திருத்தந்தை, அன்னையின் பெயர் என்றும் நமக்கு இனிமையாகவே விளங்குகிறது என்பதை எடுத்துரைத்தார்.
பணிவான, மென்மையான உள்ளம் கொண்டிருக்க, திருப்பலியின் இரு வாசகங்கள் வழியே, புனித பவுல் அடியாரும், இயேசுவும் விடுக்கும் அழைப்பு, நமக்குச் சவால்களாக அமைந்துள்ளன என்று திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.
மேலும், "ஒவ்வொரு மனிதர் மீதும் இயேசு கொண்டிருக்கும் கருணை நிறை அன்பில் பங்கேற்பதே, அவரை பின்பற்றுவதன் பொருள்" என்று இவ்வியாழன் வெளியிட்ட Twitter செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தன் Twitter செய்திகளில் "அமைதிக்காகச் செபிப்போம்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து அழைப்பு விடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.