2013-09-11 14:19:18

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


செப்.11,2013. ஏறத்தாழ இருமாத விடுமுறை இடைவெளிக்குப்பின் கடந்த வாரம் தன் வாராந்திர புதன் பொதுமறைபோதகத்தைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'திருஅவை நம் தாய்' என்ற தலைப்பில் தன் மறைக்கல்விப் போதனையை வழங்கினார்.
ஆதிகால திருஅவைத் தந்தையர்களும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் திருஅவையை நம் தாயாக பயன்படுத்திய உருவகத்தைக் குறித்து, திருஅவை குறித்த எனது இன்றைய மறைபோதகத்தைத் தொடர விரும்புகிறேன். தாய்மை என்ற எண்ணத்தை நம் அனுபவங்களைக் கொண்டு நோக்கும்போது, திருஅவை என்பது நம் சொந்த தாயை ஒத்ததே என்பதை புரிந்துகொள்கிறோம். முதலில், இவ்வுலகில் நமது அன்னையரைப் போலவே, திருஅவையும் வாழ்வெனும் கொடையை வழங்குகிறது. திருமுழுக்கு எனும் அடையாளத்தின் வழி நாம் கடவுளின் குழந்தைகளாக மீண்டும் பிறப்பெடுப்பதோடு, அவரின் வாழ்வையும் பெறுகிறோம். விசுவாசம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடாக இருக்கின்றபோதிலும், மற்றவர்கள் மூலமாக, குறிப்பாக, நாம் எவ்வாறு விசுவசிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தரும் நம் குடும்பங்கள், சமூகங்கள் மூலமாக நாம் அந்த விசுவாசத்தைப் பெறுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இரண்டாவதாக, நம் அன்னையர்களைப்போல், திருஅவையும் நமக்கு உணவூட்டி நாம் வளர உதவுகின்றது. நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்றுத்தந்து, நம் வாழ்வில் நம்மோடு துணை வருகிறது, குறிப்பாக நாம் நோயுற்றிருக்கும்போதும், நம் துன்பவேளைகளிலும் இறைவார்த்தை மூலமாகவும், திருவருட்சாதனங்கள் மூலமாகவும் நம்மோடு இணைந்து வருகிறது. மூன்றாவதாக, நாம் முன்னோக்கிச்சென்று ஏனையோரையும் விசுவாச வாழ்வுக்குக் கொண்டுவருவதன்மூலம் திருஅவையின் தாய்மையில் பங்குபெறுவது நம் மறைப்பணியாகிறது. கிறிஸ்தவர்களாக நாம் வாழ்வதற்கு உதவும் திருஅவையை நாம் நம் தாயாக அன்புகூர்கிறோமா என்ற கேள்வியை நம்மை நோக்கி நாம் கேட்கவேண்டியுள்ளது. மற்றவர்களுக்கு கிறிஸ்துவை எடுத்துச்செல்லும்பொருட்டு நாம் எவ்வாறு நம்மையும் தாண்டிச்செல்கிறோம்? விசுவாசத்தின் குழந்தைகளாகிய நாம், உலகின் இறுதி எல்லைவரை கிறிஸ்துவின் ஒளியை எடுத்துச்செல்வோம்.
இவ்வாறு, தன் புதன்பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.