2013-09-11 16:13:26

காலியாகிவரும் துறவு இல்லங்கள் வறியோருக்குப் புகலிடம் தரும் இல்லங்களாக மாறவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.11,2013. உரோம் நகரிலும் இன்னும் உலகின் பல இடங்களிலும் காலியாகிவரும் துறவு இல்லங்கள் வறியோரை வரவேற்று புகலிடம் தரும் இல்லங்களாக மாறவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்திற்கு இச்செவ்வாயன்று மாலையில் சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மையத்தில் பணிபுரிவோர் மற்றும் அங்கு உதவிகள் பெறும் புலம்பெயர்ந்தோர் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
இயேசு சபையினரைப் போலவே இன்னும் பல்வேறு துறவுச் சபையினரும், வேறு பல பிறரன்புப் பணி மையங்களை நடத்தும் அனைவரையும் பாராட்டியத் திருத்தந்தை, பாதுக்காப்பது, பணியாற்றுவது, பயணிப்பது ஆகிய மூன்று கருத்துக்களில் தன் உரையை வழங்கினார்.
தகுதியான முறையில் இறைவனைப் புரிந்துகொள்ள நமக்கு பாடங்கள் சொல்லித்தரும் சிறந்த ஆசிரியர்கள் வறியோரே என்று கூறியத் திருத்தந்தை, வறியோரிடம் காணப்படும் நலிவுற்ற நிலை நமது தன்னலக் கவசங்களை நீக்கிவிட்டு, எளிமையான முறையில் வாழ அழைப்பு விடுக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இயேசு சபையை நிறுவிய புனித லொயொலா இஞ்ஞாசியார், சமுதாயத்தில் நலிந்தோரை வரவேற்கும் பாங்கினைச் சொல்லித்தந்தார் என்றும், அவர் வழியில் இயேசு சபைத் தலைவராக இருந்த அருள் பணியாளர் பேத்ரோ அருப்பே அவர்கள் வாழ்வில் அனைத்தையும் இழந்த புலம்பெயர்ந்தொருக்கென பணி மையங்களை நிறுவ 1981ம் ஆண்டு முக்கியமான ஒரு முடிவெடுத்தார் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பணியாளர்கள் குறைவினால் காலியாகும் துறவு இல்லங்கள், கிறிஸ்துவின் காயப்பட்ட உடலைப் பேணிக் காக்கும் இல்லங்களாக மாற வேண்டும் என்ற குறிப்பான வேண்டுகோளை திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
மேலும், தீமைக்கு எதிரான போர் ஒன்றே நாம் அனைவரும் இவ்வுலகில் மேற்கொள்ளவேண்டிய போர், அமைதிக்காக வேண்டுவோம் என்ற Twitter செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று மாலை ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.