இராணுவ முயற்சிகள் சிரியாவில் எவ்வித பயனுமற்ற வகையில் துன்பங்களை உருவாக்கும் - அமெரிக்க
ஆயர்கள் பேரவை
செப்.11,2013. சிரியாவில் போர் நிறுத்தத்தை உறுதி செய்து, போரிடும் குழுக்களை பேச்சுவார்த்தையில்
ஈடுபடத்தும் முயற்சிகளை அமெரிக்க அரசு மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை
அரசிடம் விண்ணப்பித்துள்ளது. 36 ஆயர்களைக் கொண்ட அமெரிக்க ஆயர் பேரவையின் உயர்மட்ட
குழுவொன்று வாஷிங்டன் நகரில் இப்புதன் விழாயன் ஆகிய நாட்கள் மேற்கொண்ட ஒரு கூட்டத்தின்
முதல் நாளன்று இவ்விண்ணப்பம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இராணுவ முயற்சிகள் சிரியாவில்
எவ்வித பயனுமற்ற வகையில் மேலும் துன்பங்களை உருவாக்கும் என்றும், அரசியல் தீர்வுகளை பேச்சுவார்த்தைகளே
உருவாக்கமுடியும் என்றும் ஆயர்கள் தங்கள் விண்ணப்பத்தில் வலியுறுத்தியுள்ளனர். இராணுவத்
தாக்குதல்களில் பணத்தைச் செலவிடுவதற்குப் பதில், துயர்துடைப்புப் பணிகளுக்கு இன்னும்
அதிகப் பணத்தை ஒதுக்கும் முடிவுகளை அரசு எடுக்கவேண்டும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர். மத
வேறுபாடுகள் ஏதுமின்றி துயர் துடைப்புப் பணிகள் செய்யப்படுவேண்டும் என்பதை வலியுறுத்தும்
ஆயர்கள், கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மைச் சமுதாங்களுக்கு அதிக அக்கறை காட்டப்படவேண்டும்
என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.