2013-09-10 16:18:02

விவிலியத் தேடல் வீட்டுப் பொறுப்பாளர் உவமை


RealAudioMP3 பங்குத்தந்தை ஒருவர் ஞாயிறு திருப்பலியில் இயேசுவை அலகை சோதித்ததை அன்றைய நற்செய்தியாக வாசித்தபின், “அன்பு இறைமக்களே, நாமும் சாத்தானைப் பின்பற்ற வேண்டும்” என்று தன் மறையுரையை ஆரம்பித்தார். அவர் அவ்விதம் சொன்னதும் கோவிலில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் அவரைப் பார்த்தனர். “கடவுளின் மகன் என்று தெரிந்தும், சாத்தான் மனம் தளர்ந்துவிடவில்லை, முதல்முறை தோற்றதும் பயந்து பின்வாங்கவில்லை. எப்படியும் இறைவனையே வெல்லமுடியும் என்ற துணிவுடன் அது இறைமகனை நெருங்கியது. ஆம் அன்பு இறைமக்களே, உலக மக்களை தன் வழிக்கு இழுப்பதில், சாத்தான் எப்படி இரவும் பகலும் அயராது வேலை செய்கிறதோ, மனம் தளராமல் முயற்சிகள் செய்கிறதோ, அதேபோல், நாமும் பிறரை நல்வழியில் நடத்திச்செல்ல அயராது, மனம் தளராது உழைக்கவேண்டும்” என்று அவர் விளக்கம் அளித்தபோது மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பங்குத் தந்தை கொடுத்த இந்த அதிர்ச்சி மருத்துவத்தைப் போல, இயேசுவின் உவமை ஒன்று ஒலிக்கிறது. செல்வர் ஒருவரிடம் பணியாற்றிய ஒரு வீட்டுப் பொறுப்பாளர், நேர்மையற்ற வழியில் நடப்பதை எடுத்துக்கூறி, அவரைப் போல முன்மதியோடு செயலாற்றவேண்டும் என்று இயேசு கூறும் உவமையை இன்று சிந்திக்க வந்துள்ளோம்.

லூக்கா தான் எழுதிய நற்செய்தியிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் செல்வத்தை பற்றி அடிக்கடி குறிப்பிட்டுள்ளார். செல்வத்தின் நிலையாமை குறித்து அறிவற்ற செல்வன் உவமையில் தெளிவாக்கிய லூக்கா, வீட்டுப் பொறுப்பாளர் உவமையில் செல்வத்தை எவ்விதம் பயன்படுத்துவது என்பது குறித்த பாடங்களைக் கூறுகிறார். அறிவற்ற செல்வன் அதிகம் சேர்த்துவிட்டதால் ஓய்வெடுத்து, உண்டு குடித்து வாழ முடிவு செய்கிறார். தவறு செய்து பிடிபடும் வீட்டுப் பொறுப்பாளரும் தான் தற்போது செய்துவரும் பணியிலிருந்து கட்டாய ஓய்வுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், அந்த ஒய்வு வாழ்வுக்குத் தேவையான வழிகளைத் தேடிக் கொள்கிறார்.
ஒரு செல்வரிடம் நேர்மையற்ற முறையில் பணியாற்றிய வீட்டுப் பொறுப்பாளரைக் குறித்து இயேசு கூறிய இவ்வுவமை, அவர் கூறிய அனைத்து உவமைகளிலும் கடினமான உவமையென்று பல விவிலிய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவ்வுவமைக்கு வேறுபட்ட, முரண்பட்ட தலைப்புக்கள் தரப்பட்டுள்ளன. 'முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்', 'குறுக்குச் சிந்தனையுடைய வீட்டுப் பொறுப்பாளர்', 'நேர்மை தவறிய வீட்டுப் பொறுப்பாளர்' என்று இவ்வுவமை பலவாறாகப் பெயரிடப்பட்டுள்ளது. நம் தேடலைத் துவைக்கிவைக்க, இவ்வுவமைக்கு முதலில் செவிமடுப்போம்:
லூக்கா நற்செய்தி 16: 1-8
இயேசு தம் சீடருக்குக் கூறியது: செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, 'உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாதுஎன்று அவரிடம் கூறினார்.
அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், 'இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

இயேசு கூறிய இவ்வுவமையில் நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை ஒன்று உள்ளது. இதுவே இவ்வுவமையைப் புரிந்துகொள்வதில் சிக்கலை உருவாக்குகிறது. நேர்மையற்ற முறையில் நடந்துகொண்ட வீட்டுப் பொறுப்பாளரை அவரது தலைவர் பாராட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது. பாராட்டுவது தலைவர் மட்டுமா, அல்லது, இயேசுவும் அவரது அறிவுத் திறனை, முன்மதியைப் பாராட்டுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. பொதுவாகவே, இயேசுவின் போதனைகளில் ஆச்சரியம், அதிர்ச்சி ஆகிய வழிகளை அவர் கையாண்டார் என்பதை நாம் விவிலியத்தின் பல பகுதிகளில் காண்கிறோம். அத்தகையதோர் அதிர்ச்சி வழியை இங்கும் பயன்படுத்தி, அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயலாற்றியது நமக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாக, இயேசுவின் உவமைகளில் ஒரு மையமான கருத்து சொல்லப்படும். ஆனால், இவ்வுவமையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்துக்கள் சொல்லப்படுவதாகத் தெரிகிறது. நற்செய்தியாளர் லூக்கா, உவமையின் இறுதியில் மூன்று விளக்கங்களை இயேசுவின் கூற்றுக்களாகக் கூறியுள்ளார் என்று, புகழ்பெற்ற விவிலிய ஆய்வாளர் C.H.Dodd (Charles Harold Dodd) என்பவர், 'இறையரசின் உவமைகள்' (The Kingdom Parables) என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார்.
Klyne Snodgrass என்ற மற்றொரு விவிலிய ஆய்வாளர், இவ்வுவமையைக் குறித்து பேசுகையில், காலியான இடங்களைப் பூர்த்தி செய்க என்ற பாணியில் அமைந்துள்ள இந்த உவமை, பல்வேறு அர்த்தங்களைத் தருகின்றது என்று கூறுகிறார். லூக்கா நற்செய்தி 16ம் பிரிவின் முதல் 8 இறைச் சொற்றொடர்களில் இவ்வுவமை முடிந்ததுபோல் தெரிந்தாலும், அடுத்த ஐந்து இறைச் சொற்றொடர்களில் இயேசு செல்வத்தைக் குறித்து வேறு பல கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்:
லூக்கா நற்செய்தி 16: 9-13
ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? 'எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது.

‘செல்வர் ஒருவர்’ என்று இவ்வுவமை ஆரம்பித்திருந்தாலும், இவ்வுவமையின் நாயகன் அச்செல்வரிடம் பணியாற்றிய வீட்டுப் பொறுப்பாளர். 'பொறுப்பாளர்' என்ற சொல் சவால்கள் நிறைந்த ஆழமான கருத்துக்களை நம்முன் வைக்கின்றது. உலகில் பிறக்கும் நாம் அனைவருமே உலகம் என்ற வீட்டின் பொறுப்பாளர்கள். இந்த வீட்டுக்கு நாம் உரிமையாளர்கள் அல்ல. இந்த அடிப்படை உண்மையை மறந்துவிடுவதால், நமக்குள் உருவாகும் பிரச்சனைகள், தனிமனித வாழ்வில் ஆரம்பித்து, குடும்பங்களில் குழப்பத்தை உருவாக்கி, உலக நாடுகளிடையே போர்களாக வளர்ந்து நம்மை வாட்டுகின்றன. நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தப் பூமியை நாடுகளாகக் கூறுபோட்டு ஒவ்வொருவரும் உரிமை கொண்டாட முயல்கிறோம். நாடுகளுக்கு இடையிலும், ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் உரிமையாளர்கள் என்ற மமதை எல்லை மீறி வளரும்போது, அநீதமான குறுக்கு வழிகளும், ஏமாற்று வித்தைகளும், வன்முறைகளும் வெடிக்கின்றன.

செப்டம்பர் 11 என்ற தேதி நமக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிகழ்ந்த தாக்குதல்களை நினைவுறுத்தும் ஒரு நாளாக மாறிவிட்டது. 2001ம் ஆண்டு இத்தாக்குதல்கள் நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம்... அமெரிக்க ஐக்கிய நாடு வேற்று நாடுகளில் அனுமதியின்றி நுழைந்து மேற்கொண்ட இராணுவ முயற்சிகள். தன் வீட்டிற்கு ஒழுங்கான பொறுப்பாளராக இருக்கமுடியாத அமெரிக்க அரசு, அடுத்த நாடுகளுக்குப் பொறுப்பேற்பது வேதனைதரும் வேடிக்கை. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதல்களிலிருந்து அமெரிக்க அரசு சரியான பாடங்களைப் பயில தவறியதோ என்று தற்போது எண்ணத் தோன்றுகிறது. அந்த அரசு தற்போது சிரியாவின் மீது இராணுவத் தாக்குதல்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பற்றி பேசி வருகிறது.
சிரியாவின் மீது இராணுவத் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் அமேரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை எண்ணிப் பார்க்கும்போது, இவர்கள் உலகமனைத்திற்கும் தங்களையே பொறுப்பாளர்களாக அறிவித்துக்கொண்டு, இவ்வுலகின் காவல் அதிகாரிகளாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு, எடுக்கும் முடிவுகள் உலகச் சமுதாயத்தை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவ்வுலகம் அனைத்துமே தங்களுக்குச் சொந்தம் என்ற பாணியில் இவர்கள் நடந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது. தங்களுக்கும், தங்கள் நாட்டுக்கும் எதோ ஒருவகையில் பயன் உருவாகும் என்ற மறைமுக நோக்கத்திற்காக அவர்கள் சிரியாவில் ஆயுதத் தாக்குதலை மேற்கொள்ள எண்ணியிருப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்தமுடியாத ஒரு கருத்து.
உலகம் என்ற வீட்டின் பொறுப்பாளர்களாகத் தங்களையே அறிவித்துக்கொள்ளும் இவ்விரு நாட்டு அரசுத் தலைவர்களுக்கு இறைவன் நல்லறிவைத் தரவேண்டும் என்று இந்நேரத்தில் நாம் தொடர்ந்து செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.