2013-09-09 16:27:14

வாரம் ஓர் அலசல் – தீமையை எதிர்ப்போம் தீபங்கள் ஏற்றி....


செப்.09,2013 RealAudioMP3 . சகோதரி ஒருவர், அவரோடு வேலை செய்யும் ஓர் தாதியர் பற்றிக் கவலையோடு ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அந்தத் தாதியர் மிகவும் நல்லவர், பிறரன்புக் குணத்தில் சிறந்தவர், தனது வேலை முடிந்தவுடன் உடன்வேலை செய்பவர்க்கு உதவிகள் செய்பவர், நோயாளிகளிடமும் பாரபட்சமின்றி, முகம்கோணாமல் இருப்பவர், மேலும், சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது என எல்லா வேலைகளையும் வீட்டிலும் செய்து அவரது மனைவிக்கு உதவியாக இருப்பவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் இந்தக் கோடைவிடுமுறை முடிந்து வேலைக்கு வந்தபோது மிகவும் சோர்ந்து காணப்பட்டார். அவரை இப்படிச் சோகமாகப் பார்த்ததே இல்லை. எனவே அவரிடம் அதற்கான காரணத்தை என்னோடு வேலைசெய்யும் சிலர் சேர்ந்து கேட்டோம். அப்போது அவர்....
எனது மனைவி என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார். எனது மூன்று வயது மகளும் எனது மனைவியோடு இருக்கிறார். எங்களது மணமுறிவை என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குள் இப்படி நடந்துவிட்டது. நான் இந்த வேதனையிலிருந்து வெளிவருவதற்கு எனக்குள்ளே போராடிக்கொண்டிருக்கிறேன்
என்று சொல்லி கண்ணீர்விட்டதாகச் சொன்னார் அச்சகோதரி. இதேபோல்தான் அன்று ஓர் இளம்பெண்ணும் தொலைபேசியில் தனது சோகக் கதையைச் சொல்லி, தான் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தைப் பகிர்ந்துகொண்டார். அன்பு நேயர்களே, இப்படிப் பலர் வாழ்வுக்கும் சாவுக்கும் எதிரான, நன்மைக்கும் தீமைக்கும் எதிரான மனப்போராட்டத்தில் உழன்று வருகின்றனர். இன்றைய சமுதாயம் முன்வைக்கும் மதிப்பீடுகளில் எது சரி, எது தவறு என்று தீர்மானம் எடுக்கமுடியாத குழப்ப நிலையில் பலர் உள்ளனர். வயதில் மூத்தவர்களுக்கு, சரி என்று தோன்றுபவை, இளவயதினருக்கு தவறு என்று தோன்றுகின்றன. இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய ஒரு இலட்சம் பயணிகளிடம், சிரியாவிலும், மத்திய கிழக்கிலும் அமைதி குறித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், "தீமைக்கு எதிரான உள்மனப்போராட்டம்" பற்றியும் பேசினார். நன்மைக்கும் தீமைக்கும் இடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் நாம் எல்லாருமே போரிடவேண்டியிருக்கின்றது, அது "தீமைக்கு எதிரான ஓர் அகப்போர்" என்று அவர் கூறினார். தீமைக்கு எதிரான உள்மனப்போரை நடத்த நாம் திறமையற்றவர்களாய் இருக்கும்போது எதற்கு நாம் போரிடுகிறோம்? எதற்கு இத்தனை போர்கள்? என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். இக்காலத்தில் போர்கள், பிரச்சனைகள் குறித்து நடக்கின்றனவா அல்லது கறுப்புச் சந்தையில் ஆயுதங்களை விற்பதற்காக நடக்கின்றனவா என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நேரத்தில் RealAudioMP3 இவ்வுரையைக் கேட்டுக்கொண்டிருந்த ஏறக்குறைய ஒரு இலட்சம் பயணிகள் கைகளைத் தட்டி திருத்தந்தை அவர்களின் இக்கருத்துக்கு தங்களது இசைவையும் தெரிவித்தனர்.
சிரியா நாட்டின்மீது மூன்று நாள்கள் 50 இடங்களில் தீவிரத் தாக்குதல்கள் நடத்தவும், தேவைக்கேற்ப இந்த இலக்கு கூடவோ, குறையவோ செய்யலாம் எனவும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தங்களின் திட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகின்றது. சிரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சண்டையில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 இலட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியாமீது வெளிநாட்டினர் இராணுவத் தாக்குதலை நடத்தினால் அதன் பின்விளைவு பயங்கரமானதாக இருக்கும் என திருஅவைத் தலைவர்களும், நன்மனம் கொண்ட அனைவரும் எச்சரித்து வருகின்றனர். மேலும், எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal அவர்களும், அமெரிக்கர்களை, அனைத்துலகச் சமுதாயத்தின் காவல்துறையாக நியமித்தவர் யார்? சிரியாமீது தாக்குதல் நடத்த இந்நாட்டுக்கு அனுமதி அளித்தது யார்? என்பன போன்ற சில கேள்விகளை அழுத்தமாக எழுப்பியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் மெக்ஹெயின்(McCain) கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றில், மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் சிரியா நாட்டுப் பெண் ஒருவர், சிரியாவின் தற்போதைய நிலைமை தொடர்பாக கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினார். அப்பெண் சொன்னார்... RealAudioMP3
சிரியாவில் போரிடும் இருதரப்புகளும் சண்டையை நிறுத்தி பேச்சுவார்த்தையில் அவர்களை ஈடுபடச் செய்வதற்கு தூதரகரீதியில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இன்னுமோர் ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக சிரியாவைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்கா, சிரியாவில் போரிடச் செல்வதைப் பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்பவில்லை. பத்து நாள்களுக்கு முன்னர் 18 வயதான எனது உறவினர் ஒருவர் சிரியாவில் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
இப்பெண்ணின் நியாயமான கேள்விகளுக்கு, செனட்டர் மெக்ஹெயின் பதிலளிக்க முடியாமல் சிறிது நேரம் வாயடைத்து நெளிந்துகொண்டு நின்றதை youtubeல் பார்க்க நேர்ந்தது. இப்பெண்ணின் இக்கேள்விகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆம். நன்மனம்கொண்ட எல்லாரும் இன்று எதிர்பார்ப்பது மற்றொரு போரையல்ல, மாறாக, அமைதிக்கு வழியமைக்கும் உரையாடலையும் பேச்சுவார்த்தையையுமே. இதைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவில் வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்ற இரவு விழிப்புச் செபத்திலும், இனி ஒருபோதும் போர் வேண்டாம், வன்முறை வேண்டாம். அமைதி வேண்டும். உரையாடலும், மன்னிப்பும், ஒப்புரவும்தான் வேண்டும் என்று கூறினார RealAudioMP3 ். இஞ்ஞாயிறன்றும் இதையேதான் அவர் மீண்டும் மீண்டும் கூறினார். மத்திய கிழக்கில், சிரியாவில் மட்டுமல்ல, லெபனன், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈராக், எகிப்து ஆகிய நாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் பேசுகையில்.....
நாம் கைவிடவேண்டிய பல காரியங்களில், சகோதரத்துவக் கொலைகளைச் செய்யும் காழ்ப்புணர்வை விட்டொழிப்பதும் ஒன்று. இந்தக் கொலைகளுக்கு உரமிடும் ஆயுதப்பரவல், சட்டத்துக்குப்புறம்பே ஆயுத வியாபாரம் உட்பட அனைத்துவிதமான வன்முறைகளை நாம் கைவிடவேண்டியிருக்கிறது. இதுபோன்று நாம் கைவிட வேண்டியது ஏராளம், ஏராளம். ஆயுதங்களை விற்பதற்காக ஏற்படும் ஒரு வணிகப் போர் இது. இந்த எதிரிகளை, இந்தப் பகைவர்களை நாம் ஒன்றிணைந்து, உறுதியுடன் எதிர்க்க வேண்டும். அமைதி மற்றும் பொதுநலனைத் தவிர வேறு எந்த எண்ணமும் இதில் இருக்கக் கூடாது. அமைதியைத் தேடுவது நீண்டகாலச் செயலாகும், இதற்குப் பொறுமையும் விடாஉறுதியும் தேவை.
RealAudioMP3 அன்பு நேயர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதுபோன்று, பல சமூகத் தீமைகளுக்கு எதிரான போரை நாம் நடத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில் நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட வாழ்வில் நம்மை ஆக்ரமித்திருக்கும் தீமைகளை எதிர்த்துப் போராடி வெற்றியடைய வேண்டும். அடுத்து சமுதாயத்தைக் கறைப்படுத்தும் தீமைகளுக்கு எதிரானப் போரை நடத்தவேண்டும். செப்டம்பர் 10, இச்செவ்வாய் அனைத்துலக தற்கொலை தடுப்பு தினம். வாழ்வா சாவா என்ற மனப்போரை ஒவ்வொரு நிமிடமும் எத்தனையோ பேர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். தினமும் உலகில் சராசரியாக மூவாயிரம் பேரும், ஓராண்டில் ஏறக்குறைய பத்து இலட்சம் பேரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது. தற்கொலைகள் தடுத்து நிறுத்தக்கூடியவை என்பதை வலியுறுத்தி இவை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2003ம் ஆண்டிலிருந்து இந்த அனைத்துலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே மனப்போரை நடத்தும் மனிதருக்கு நாம் உதவி செய்யலாம். அவர்கள் வாழ்வில் தீபத்தை ஏற்றலாம்.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனை வைத்திருத்தல் தொடர்பிலானக் குற்றச்சாட்டுக்களின்பேரில் தினமும் 150 பேர் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 20 மாதங்களில் இவ்விவகாரத் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 90 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இத்திங்கள் செய்தி ஒன்று கூறுகின்றது. ஆம். போதைப்பொருள் வணிகம், சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் எதிரான பாலிய வன்செயல்கள், மனித வியாபாரம், கட்டாய அடிமைத்தொழில், கொத்தடிமைகள், பாலர் தொழில்முறை, குழந்தைத் திருமணம், சைபர் குற்றங்கள், சுற்றுச்சூழல் மாசுகேடு போன்ற சமூகத் தீமைகளை ஒழிக்கும் போர்களில் இந்த உலக சமுதாயம் இன்னும் வெற்றியடையவில்லை. இனதெய்வங்களைக் குழந்தை வடிவில் போற்றும் சமூகம், கருவிலே குழந்தைகளுக்குச் சமாதி கட்டும் தீமைக்கு எதிரான போரிலும் வெற்றியடையவில்லை. இப்படி இந்த மனித சமுதாயம் எதிர்த்துப் போரிடவேண்டிய பல தீமைகள் இருக்கின்றன. அப்படியிருக்க ஆயுத விற்பனைக்காக ஒரு போரை நடத்துவது, அப்பாவிகளைப் பலியாக்குவது, இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் ஓரிடத்தில் மேலும் அதிகளவு இரத்தம் சிந்தவைக்கும் தீவிரத்தாக்குதலை நடத்தத் திட்டமிடுவது எவ்வகையில் நியாயம்?

ஒரு யானைப் பாகன் தன் யானைகளைக் கப்பலில் ஏற்றுவதற்காக அவைகளை வரிசையாக நிற்க வைத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த எறும்பு ஒன்று, ஒரு யானையிடம், யானையே! என்னை ஏன் தள்ளுகிறாய்? எனச் சலித்துக்கொண்டதாம்.

ஒருவரின் சுயம் எவ்வளவு வலுவானது என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. எறும்புக்கே இவ்வளவு என்றால் மனிதருக்கு! ஆம். முழு மாற்றம் என்பது சுயத்தை விட்டொழிப்பதிலிருந்து பிறப்பது, ஒவ்வொருவரின் மனசாட்சியின் மாற்றத்திலிருந்து பிறப்பது. நாம் சரியானதை சரியான நேரத்தில் செய்ய வேண்டும். இல்லாவிடில் கறுப்பு மேகங்கள் என்ற தீமைகள் நம் வாழ்வைக் கறைப்படுத்திவிடும். எனவே அன்பர்களே, தீமைகளை ஒழிக்கமுடியும் என்ற நம்பிக்கைத் தீபங்களை ஏற்றுவோம். நம் வாழ்வை எரித்துக் கொண்டிருக்கும், தான் என்ற அகம்பாவம், பேராசை, பொறாமை, பகை, வெறுப்பு போன்ற தீமைகளை அகற்ற ஓர் உள்மனப்போரை நடத்துவோம். அப்போது நம் ஒவ்வொருவரிலும், வீட்டிலும், நாட்டிலும் உலகிலும் அமைதி கிட்டும்.







All the contents on this site are copyrighted ©.