2013-09-09 16:23:51

திருத்தந்தை பிரான்சிஸ்: இயேசுவின் சிலுவை வழியைப் பின்செல்லுங்கள்


செப்.09,2013. இயேசுவைப் பின்செல்வது என்பது அவரின் வெற்றிப்பவனியில் பங்கு கொள்வது அல்ல, ஆனால் அவரின் கருணைநிறைந்த அன்பில் பங்குகொண்டு ஒவ்வொரு மனிதருக்கும் மனித சமுதாயம் முழுவதற்குமான அவரின் மாபெரும் கருணைப் பணியில் சேருவதாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய ஒரு இலட்சம் பயணிகளுக்கு மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் சிலுவை வழியில் அவரைப் பின்செல்லுமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
இயேசுவின் சீடர்களாய் இருப்பதற்குரிய வரைமுறைகள் குறித்து விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் அன்புக்கு முன்பாக வேறு எதையும் வைக்க வேண்டாமென்றும், ஒவ்வொருவரும் தனது சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்செல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
பலர் இயேசுவை, சிறப்பாக, புதுமைகள் நடந்தபோது அவரைப் பின்செல்ல விரும்பினர், ஆனால் இயேசு அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று விளக்கிய திருத்தந்தை, எருசலேமில் தமக்குக் காத்திருப்பது என்ன என்பதை நன்றாக அறிந்திருந்த இயேசு, நம் பாவங்களுக்கு மன்னிப்பாக, அவர் தம்மையே தியாகம் செய்த சிலுவையின் வழியில் தந்தை அவரை நடக்கக் கேட்டுள்ளார் என்பதையும் இயேசு அறிந்திருந்தார் என்றும் கூறினார்.
தந்தை தம்மிடம் கொடுத்த பணியில் இயேசு நம்மையும் இணைக்க விரும்புகிறார் என்றும், உயிர்ப்புக்குப் பின் இயேசு இப்பணியைத் தம் சீடர்களுக்கு அளித்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
சீடர்கள் இயேசுவில் மாபெரும் பொருளைக் கண்டுணர்வதால் அவர்கள் அனைத்தையும் துறந்து தம்மைப் பின்செல்ல வேண்டும், நற்செய்தியின் தத்துவத்தில், அன்பு மற்றும் பணியின் தத்துவத்தில் கிறிஸ்தவர்கள் எல்லாவற்றிலிருந்தும் பற்றுக்களை அறுக்கின்றனர், எல்லாவற்றையும் மீண்டும் கண்டுகொள்கின்றனர் என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சீடர்களைப் போன்று, கிறிஸ்துவுக்காக, குடும்பம், உறவுகள், வேலை, கலாச்சாரம், பொருள்கள் ஆகியவற்றைத் துறக்கும் கிறிஸ்தவர்கள் அவரில் அனைத்தையும் புதிதாகக் கண்டுகொள்கிறார்கள் என்றும் ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.