2013-09-09 16:26:57

திருத்தந்தை பிரான்சிஸ் : மன்னிப்பு, உரையாடல், ஒப்புரவு ஆகியவையே அமைதியின் வார்த்தைகளாகும்


செப்.09,2013. படைப்பின் சிகரமான மனிதர், படைப்பின் அழகையும் நன்மைத்தனத்தையும் தியானிப்பதை நிறுத்தும்போதும், தனது தன்னலத்துக்குள் நுழையும்போதும், வன்முறையும், பிரிவினையும், முரண்பாடும் போரும் இவ்வுலகில் இடம்பெறுகின்றன எனறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி நிலவ கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து, 11 மணிவரை இடம்பெற்ற செப வழிபாட்டிற்குத் தலைமைத் தாங்கி வழிநடத்திய திருத்தந்தை, மனிதர் தன்னைப்பற்றி மட்டுமே, தனது சொந்த ஆதாயங்களை மட்டுமே நினைக்கும்போதும், தன்னை மையப்படுத்தும்போதும், ஆட்சி அதிகார நிலைகளால் கவரப்படுவதற்குத் தன்னை அனுமதிக்கும்போதும், கடவுளின் இடத்தில் தன்னை வைக்கும்போதும், எல்லா உறவுகளும் முறிந்து விடுகின்றன, அனைத்தும் பாழ்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.
‘ நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியா?’ என்று கேட்ட காயினின் மறுபிறப்பை ஒவ்வொரு வன்முறைச் செயலிலும், ஒவ்வொரு போரிலும், கொண்டு வருகிறோம் என்ற திருத்தந்தை, இன்றும் சகோதரருக்கு இடையேயான சண்டையின் வரலாறு தொடர்கிறது, நமது மனசாட்சி ஆழ்ந்து உறங்குகின்றது, அழிவையும், வேதனையையும் மரணத்தையும் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற கவலையை வெளியிட்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் வத்திக்கான் பேதுரு வளாகத்தில் நடந்த இந்த செபவழிபாட்டில், இஸ்லாம் மதப் பிரதிநிதிகள் உட்பட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.