2013-09-09 16:24:49

திருத்தந்தை : தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போர் நம் ஒவ்வொருவர் இதயத்திற்குள்ளும் இடம்பெற வேண்டும்


செப்.09,2013. சிரியா, லெபனன், இஸ்ராயேல், பாலஸ்தீனம், ஈராக், எகிப்து உள்ளிட்ட மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ தொடர்ந்து செபிக்குமாறு மீண்டுமொருமுறை அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொருவரும் கொண்டிருக்கவேண்டிய நல்லதையே தேர்ந்தெடுக்கும் மனநிலை, சகோதரத்துவ பகைமையையும், அது உருவாக்கும் பொய்களையும், அனைத்து வன்முறைகளையும், ஆயுத பயன்பாட்டையும், ஆயுதங்களின் சட்டவிரோத வியாபாரத்தையும் ஒதுக்கித்தள்ளுவதாக இருக்கவேண்டும் என இஞ்ஞாயிறு நண்பகல், தூய பேதுரு வளாகத்தில் வழங்கிய மூவேளை செப உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
அமைதிக்கானத் தேடல் என்பது மிக நீளமானது, அது பொறுமையையும் விடாமுயற்சியையும் எதிர்பார்க்கின்றது என்ற பாப்பிறை, தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போர் நம் ஒவ்வொருவர் இதயத்திற்குள்ளும் இடம்பெற வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்ததார்.
தீமைக்கு எதிரான போராட்டத்தை நம் உள்மனதிற்குள் நாம் நடத்தாவிடில், ஏனைய போர்கள் அனைத்தும் பயனற்றவையே எனவும் கூறினார் திருத்தந்தை.
அமைதி மற்றும் பொதுநலனில் ஆர்வம் கொண்டவர்களாக, பகைமை, ஆயுத வியாபாரம், வன்முறை ஆகிய தீமைகளை எதிர்த்துப்போராட ஒவ்வொருவரும் உறுதிகொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
சனிக்கிழமையன்று இரவு இடம்பெற்ற அமைதிக்கான செபவழிபாட்டில் கலந்துகொண்டு மத்தியக்கிழக்குப் பகுதிக்கென செபித்த அனைவருக்கும் தன் நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.