2013-09-09 16:05:57

திருத்தந்தை : கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, தூய ஆவி மற்றும் இயேசுவின் கொடை


செப்.09,2013. கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, எதிலும் நல்லதையே எதிர்நோக்கும் மனநிலை அல்ல, மாறாக அது தூய ஆவி மற்றும் இயேசுவின் கொடை என்றார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இத்திங்களன்று காலை வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லக் கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, விசுவாசம் மற்றும் பிறரன்பைவிட குறைவாகவே அறியப்பட்டுள்ள இந்த கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, எதிலும் நல்லதை எதிர்நோக்கும் மனித இயல்போடு இணைத்துக் குழப்பப்படக்கூடாது என்றார்.
கிறிஸ்தவனுக்கு நம்பிக்கை என்பது இயேசுவே என்ற திருத்தந்தை, பாதியளவு தண்ணீர் உள்ள கோப்பையை 'பாதி நிரம்பிய கோப்பையாகப்' பார்க்கும் மனநிலையல்ல கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, என்றார்.
கிறிஸ்தவ நம்பிக்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை, ஏனெனில் அது இறைவனால் வழங்கப்படும் கொடை, எனவும் கூறினார் திருத்தந்தை.
நம் நம்பிக்கையின் காரணமாக இருப்பவர் இயேசுவே என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவுக்கும், தேவையிலிருக்கும் இறைமக்களுக்கும் அருகாமையில் இருக்கும் அருள்பணியாளர்கள், நம்பிக்கையின் அடையாளங்கள் மட்டுமல்ல, இயேசுவில் இந்த நம்பிக்கையை வாழ்பவர்கள் என்றார்.
மகிமையின் நம்பிக்கையாக இருக்கும் நமதாண்டவர், நமக்கு நம்பிக்கையையும் நம்பிக்கை மீதான ஆர்வத்தையும் வழங்குகிறார் என மேலும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.