2013-09-06 16:08:13

முதல் அனைத்துலக பிறரன்பு நாள், ஐ.நா.வுக்கு திருப்பீட அதிகாரி நன்றி


செப்.,06,2013. முத்திப்பேறு பெற்ற கொல்கத்தா அன்னை தெரேசா இறந்த நாளை அனைத்துலக பிறரன்பு நாளாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்து கடைப்பிடித்தது குறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
அன்னை தெரேசா இறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியான இவ்வியாழனன்று முதல் அனைத்துலக பிறரன்பு நாள் சிறப்பிக்கப்பட்டதை வரவேற்று அறிக்கை வெளியிட்ட, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட், நாடுகளில் காணப்படும் மனிதத் துன்பங்களை அகற்றுவதற்குப் பிறரன்பு மிகவும் அவசியம் என்பதை இந்நாள் நினைவுபடுத்துகின்றது என்று கூறினார்.
அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், எண்ண முடியாத அளவில் இலட்சக்கணக்கான மக்கள் பல்வேறு விதமான வறுமையை, பொருளாதார அளவில் மட்டுமல்லாமல் ஆன்மீக அளவிலும் அனுபவிக்கின்றனர் என்றும் பேராயர் சுள்ளிக்காட் குறிப்பிட்டுள்ளார். திருஅவை வரலாற்றில் எண்ணற்ற ஆண்களும் பெண்களும் தன்னலமற்ற அன்புக்குச் சாட்சிகளாய் வாழ்ந்துள்ளனர் என்றுரைத்த பேராயர் சுள்ளிக்காட், அன்னை தெரேசா இறந்த நாளை அனைத்துலக பிறரன்பு நாளாக அறிவித்திருப்பதற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.