2013-09-06 15:55:19

திருத்தந்தை பிரான்சிஸ் : திருமணத்துக்குப் போகும் ஒருவர் போன்று கிறிஸ்தவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்


செப்.,06,2013. திருமணத்துக்குப் போகும் ஒருவர் போன்று கிறிஸ்தவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் இவ்வெள்ளிக்கிழமை காலையில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லூக்கா நற்செய்தி 5ம் பிரிவு, திருச்சொற்கள் 33 முதல் 39 வரையிலான பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், பழைய தோற்பைகளில் நற்செய்தியின் புதியகூறை வைக்கும் சோதனைகளிலிருந்து வெளிவரவேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.
திருமணம் எனும் திருவருள்சாதனம், திருஅவையோடு கிறிஸ்து கொண்டுள்ள ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்பதை மீண்டும் மீண்டும் உரைத்த திருத்தந்தை, மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும்போது நோன்போ, சோகமோ இருக்க முடியாது என்று கூறினார்.
கிறிஸ்தவர் அடிப்படையிலே மகிழ்ச்சியானவர், இதனாலேயே திராட்சை மது பற்றி நற்செய்தியில் பேசும்போது அது விழாவைக் குறிப்பதாக இருக்கின்றது, கிறிஸ்தவ வாழ்வும் இத்தகையதே, கிறிஸ்தவ வாழ்வு இம்மகிழ்ச்சியான உணர்வை, இதயத்தின் மகிழ்வைக் கொண்டிருக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.
மேலும், கிறிஸ்துவை தனது வாழ்வின் மையமாக, தனது வாழ்வின் முழுமையாக ஏற்பது, கிறிஸ்தவக் கண்ணோட்டமாக இருக்க வேண்டும் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தியின் புதினத்தை பழைய மனப்பான்மைக்குள் திணிக்கும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றோம், இது பாவமாகும், நாம் அனைவரும் பாவிகள், இதை ஏற்க வேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.