2013-09-06 15:51:58

திருத்தந்தை பிரான்சிஸ், பொலிவியா அரசுத்தலைவர் சந்திப்பு


செப்.,06,2013. பொலிவிய நாட்டு அரசுத்தலைவர் Juan Evo Morales Ayma அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானின் அப்போஸ்தலிக்க மாளிகையில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் பொலிவிய அரசுத்தலைவர் Morales.
பொலிவிய நாட்டின் சமய, சமூக-பொருளாதாரச் சூழல், சமூகத்தில் இடம்பெறும் ஏற்றத்தாழ்வுகளையும், ஏழ்மையையும் அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள், கல்வி, நலவாழ்வு, சிறார் மற்றும் முதியோர் பராமரிப்பில் பொலிவியாவுக்குக் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன.
தலத்திருஅவைக்கும் நாட்டுக்கும் இடையேயான உறவுகள் குறித்தும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதாக அறிவித்த திருப்பீட பத்திரிகை அலுவலகம், அனைத்துலக நிலைமை, குறிப்பாக, சிரியாவிலும் மத்திய கிழக்கிலும் அமைதியை ஊக்குவிக்கவேண்டியதன் அவசியம் குறித்து இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாகத் தெரிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.