2013-09-06 15:58:11

செப்.07, 2013. கற்றனைத்தூறும்...... புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்


ஏறத்தாழ 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெடிப்பின் காரணமாக தோன்றிய பூமி, சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாக அமைந்திருக்கும் கோள் ஆகும்.
இந்த பூமியில், ஏறத்தாழ 350 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன என்றும், புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் மேலும் சுமார் 150 கோடி ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் அறிவியல் அறிஞர்களால் கூறப்படுகிறது.
தனது அச்சிலிருந்து 23.4° டிகிரி சாய்ந்து வினாடிக்கு 30 கி.மீ வேகத்தில் சுழலும் புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணிநேரமும் (ஒரு நாள்) சூரியனை ஒரு முறை சுற்றிவர 365.24 நாட்களும் (1 ஆண்டு) எடுத்துக்கொள்கிறது. புவி தொடர்ந்து பல மில்லியன் ஆண்டுகளாக ஒரே அச்சில் (23.4°) சுழன்று வருவதற்கு காரணம் நிலவிலிருந்து புவியை நோக்கி வரும் ஈர்ப்பு விசைதான்.
புவியின் நிலப்பரப்பு மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் அடுக்கு மேலோடு (Crust) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது 0 – 35 கி.மீ ஆழம் கொண்டது. புவியின் மேலோடு பத்துக்கும் மேற்பட்ட தட்டுகளைக் கொண்டது.
இரண்டாவதாக அமைந்திருக்கும் அடுக்கின் பெயர் மூடகம் (Mantle), இது 35 கி.மீ முதல் 2890 கி.மீ வரை ஆழம் கொண்டது. மூன்றாவது அடுக்கின் பெயர் கரு (Core) இது 2890 கி.மீ முதல் 6378 கி.மீ வரை ஆழம் கொண்டது. புவியின் மையப்பகுதியை அடைய புவியின் மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 6400 கி.மீ தொலைவு உள்ளே செல்ல வேண்டும்.
தற்போதுவரை புவியை மனிதரால் 8 கி.மீ ஆழத்திற்கு மேல் தோண்ட இயலவில்லை. காரணம் பூமிக்கு அடியில் போகப்போக வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போவதால்தான். ஏறத்தாழ 50 கி.மீ ஆழத்திற்கு கீழே புவி திடநிலையில் இருக்காது, திரவ நிலையில் (Liquid) தான் இருக்கும். சில இடங்களில் புவிக்குள் அழுத்தம் அதிகரித்து அந்தக் குழம்புகள் புவியைத் துளைத்துக்கொண்டு வெளியே வருவதைத்தான் நாம் எரிமலை (Volcano) என்று அழைக்கிறோம்.
விண்வெளியில் இருந்து பக்கவாட்டில் புவியின் நிலத்தோற்றத்தை பார்க்கையில், மிகவும் தாழ்வான நிலப்பரப்பாக தெரிவது இஸ்ரேல் – ஜோர்டான் எல்லையில் அமைந்துள்ள சாக்கடலின் கடற்கரை (-418 மீ) ஆகும். புவியினுடைய நிலத்தோற்றத்தின் அதிகபட்ச உயரமான நிலப்பரப்பு எவரெஸ்ட் மலை உச்சி (8848 மீ) ஆகும். கடலால் சூழப்பட்ட நிலத்தின் மிகத்தாழ்ந்த (ஆழமான) இடம், பசிபிக் பெருங்கடளிலுள்ள மரியான ட்ரென்ஞ்ச். இது கடல் மட்டத்திலிருந்து 10, 911 மீ கீழுள்ளது.

ஆதாரம் : சித்தார்கோட்டை








All the contents on this site are copyrighted ©.