2013-09-06 16:05:00

சிரியாவில் அமைதி நிலவ திருத்தந்தையுடன் இணைந்து இலத்தீன் அமெரிக்க நாடுகள் செபம்


செப்.,06,2013. சிரியாவில் அமைதிக்கு எதிராக வைக்கப்படும் கடும் அச்சுறுத்தல்கண்டு யாரும் ஒதுங்கிவிடக்கூடாது என்று பெரு நாட்டு ஆயர் பேரவை கூறியது.
சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி நிலவுவதற்குச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஞாயிறு மூவேளை செப உரையில் உலகினருக்கு விடுத்த அழைப்பு குறித்துப் பேசிய பெரு நாட்டு ஆயர் பேரவை இவ்வாறு கூறியது.
மேலும், உலகின் குறிப்பாக, சிரியாவில் அமைதிக்காக இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இச்சனிக்கிழமை செப வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
“இனி ஒருபோதும் சண்டை வேண்டாம், அமைதி என்பது ஒரு கொடை, அது பாதுகாக்கப்பட வேண்டும்” என்ற அழைப்புடன் பெரு, அர்ஜென்டினா, சிலே, உருகுவாய் உட்பட அனைத்து தென் அமெரிக்க நாடுகளின் பங்குகளும், பக்த சபைகளும், பக்த இயக்கங்களும் செபம் செய்யவுள்ளன.
மேலும், சிரியாவில் இடம்பெறும் வன்முறை, மனித உரிமை மீறல்கள், அந்நாட்டுக்கெதிராக அறிவிக்கப்பட்டுள்ள இராணுவத் தாக்குதல்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள செபம் மற்றும் நோன்பு நாள் உதவும் என அந்நாட்டின் சிரியாவின் கிறிஸ்தவரும், கிறிஸ்தவரல்லாதவரும் நம்பிக்கையோடு உள்ளனர் என அந்நாட்டு கிறிஸ்தவ அரசியல்வாதி Maria Saadeh கூறினார்.
சிரியாவின் கிறிஸ்தவர்கள் திருத்தந்தையின் உணர்வையும் ஆவலையும் பகிர்ந்து கொள்கின்றனர் எனவும் Saadeh, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.