2013-09-06 16:06:26

சிரியா குறித்து திருப்பீட வெளியுறவுச் செயலர் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு


செப்.,06,2013. சிரியாவில் அமைதி நிலவுவதற்கென ஒரு நாள் செபம் மற்றும் நோன்பு கடைப்பிடிப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பு குறித்து கலந்துபேசுவதற்கென திருப்பீடத்துக்கான நாடுகளின் தூதர்களைச் சந்தித்தார் திருப்பீட வெளியுறவுச் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி.
பேராயர் மம்பெர்த்தி அவர்கள் இவ்வியாழனன்று 71 தூதர்களைச் சந்தித்துப் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பகிர்நதுகொண்ட திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி, சிரியாவில் உண்மையான உரையாடலுக்கு வழிவகுக்கும் வன்முறையை நிறுத்துவதே முக்கியமான முதல் நடவடிக்கை என்று கூறினார்.
பேச்சுவார்த்தைமூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும், கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் திருப்பீடம் விரும்புவதாகவும் அருள்பணியாளர் லொம்பார்தி தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.