2013-09-05 17:18:58

திருத்தந்தையின் அமைதி செப வழிபாட்டிற்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு


செப்.,05,2013. சிரியாவில் அமைதிக்கென திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பு, உண்மையானது மற்றும் அனைவராலும் செவிமடுக்கப்படவேண்டியது என அழைப்புவிடுத்துள்ளார் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாம் கல்வித்துறைத் தலைவர் Syed Razi Ahmad Kamal.
சிரியாவின் அமைதிக்கென இச்சனிக்கிழமையன்று செப நாளாக கடைப்பிடிக்கப்படவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் விடுத்துள்ள அழைப்பு குறித்து தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளியிட்டுள்ள பேராசிரியர், மனித குலத்திற்கான இல்லமாகப் படைக்கப்பட்ட இவ்வுலகை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்றார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமைதிக்கான அழைப்பு குறித்து கருத்து வெளியிட்ட பாலஸ்தீன முஸ்லிம் மருத்துவரும் எழுத்தளருமான Izzeldin Abuelaisch, அமைதி குறித்து பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, ஒவ்வொருவரும் திருத்தந்தையைப்போல் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார். திருத்தந்தையின் அழைப்புக்கு இயைந்தவகையில், தான் இச்சனிக்கிழமை செபவழிபாட்டில் கலந்துகொள்ள உள்ளதாகவும், மற்றவர்களும் கலந்துகொள்ள இது குறித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார் இஸ்லாம் மருத்துவர் Abuelaisch.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.