2013-09-04 16:25:40

திருத்தந்தை பிரான்சிஸ் : சிரியாவிலும், உலகெங்கிலும் அமைதி நிலவ மீண்டும் ஒருமுறை அழைப்பு


செப்.04,2013. சிரியாவில் அமைதி நிலவ மீண்டும் ஒருமுறை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐரோப்பாவின் கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதன் பொது மறைபோதகத்தை மீண்டும் இப்புதனன்று தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான் பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி நிலவ செப்டம்பர் 7ம் நாளை செபம் மற்றும் நோன்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு உலகின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகள் மற்றும் அனைத்து மதங்களின் உறுப்பினர்களுக்கும், நன்மனம்கொண்ட எல்லாருக்கும் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அகிலத் திருஅவையும் இந்நாளை மிகுந்த உருக்கத்துடன் அனுசரிக்குமாறு வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ், இந்தத் தனது சொந்த முயற்சியில் கலந்து கொள்வதற்கு பிற கிறிஸ்தவ சபைகளின் சகோதரர்களும், பிற மதத்தினரும், நன்மனம்கொண்ட எல்லாரும் இசைவு தெரிவித்திருப்பதற்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.
வருகிற சனிக்கிழமை இரவு 7 மணிக்கு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் தொடங்கும் அமைதிக்கானச் செப வழிபாட்டில் உரோம் விசுவாசிகளும், திருப்பயணிகளும் சிறப்பாக கலந்துகொண்டு அமைதி எனும் பெரிய கொடையை ஆண்டவரிடம் கேட்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதியின் வல்லமைமிக்க அழுகுரல் ஒவ்வொரு நாட்டுக்கும் செல்வதாக எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.