2013-09-04 16:32:47

செப்.07ம் நாளன்று உலகில் அமைதி நிலவச் சிறப்பாகச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பத்தைச் செயல்படுத்த, கிறிஸ்தவத் தலைவர்கள் ஆர்வம்


செப்.04,2013. சிரியாவிலும், உலகெங்கிலும் அமைதி நிலவ, செபம் மற்றும் நோன்பைக் கடைப்பிடிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்புக்கு இணங்கும்விதமாக உலகின் அனைத்து நாடுகளின் திருஅவைகளும், பிற கிறிஸ்தவ சபையினரும், முஸ்லிம்கள் உட்பட பிற மதத்தவரும் செப்.07ம் நாளன்று உலகில் அமைதி நிலவ செபிக்கவுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாடு, பிலிப்பீன்ஸ், இந்தியா, இலங்கை, கொரியா, இந்தோனேசியா உட்பட அனைத்து ஆயர்களும் வருகிற சனிக்கிழமை நோன்பிருந்து செபிக்கவுள்ளனர்.
சிரியாவின் அரசுத்தலைவர் Bashar Assad அரசுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு சிந்தித்துவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதுபோல, பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலம் சிரியாவின் நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறு நியுயார்க் பேராயர் கர்தினால் திமோத்தி டோலன் மற்றும் Des Moines ஆயர் Richard E. Patesம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.
மேலும், பிலிப்பீன்சிலுள்ள கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகங்கள் வருகிற சனிக்கிழமையன்று செபம் மற்றும் நோன்பு அனுசரிக்கவுள்ளதாக மனிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே கூறினார்.

ஆதாரம் : CNS/Fides







All the contents on this site are copyrighted ©.