2013-09-04 16:43:01

கடந்த இருபது ஆண்டுகளில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, யுனெஸ்கோ


செப்.04,2013. எழுத்தறிவு மனித வளர்ச்சிக்கு இன்றியமையாத உந்து சக்தியாக இருக்கும்வேளை, இவ்வுலகில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவன இயக்குனர் இரினா போக்கோவா கூறியுள்ளார்.
செப்டம்பர் 8, வருகிற ஞாயிறன்று அனைத்துலக எழுத்தறிவு நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள போக்கோவா, 1990ம் ஆண்டில் உலகில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 76 விழுக்காடாக இருந்தது, இது தற்போது 84 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வின் மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகள் நிறைவேறுவதற்கு அனைத்துலக அளவில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளே இதற்குக் காரணம் எனச் சொல்லியுள்ள போக்கோவா, இன்னும் 20 ஆண்டுகளில் உலகில் எழுத்தறிவில்லாதவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேலாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலுள்ள 77 கோடியே 40 இலட்சம் வயதுவந்த எழுத்தறிவில்லாதவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள் எனவும் அவரின் செய்தி கூறுகின்றது.
‘21ம் நூற்றாண்டுக்கு எழுத்தறிவு’ என்ற தலைப்பில் இவ்வாண்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.