2013-09-04 16:36:17

அன்னைமரியா திருத்தலங்கள் – வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலம்


செப்.04,2013. இயேசுவின் தாயான மரியா உலகின் பல நாடுகளில் தேவையானபோது, தேவையான நேரங்களில், சிறார் முதல் அனைத்து வயதினருக்கும் தோன்றி தமது மகன் இயேசுவின்மீது உலகினர் நம்பிக்கை கொண்டு வாழுமாறு அழைப்புவிடுத்து வருகிறார். அன்னைமரியா காட்சி கொடுக்கும் இடங்களை வைத்தே பல நேரங்களில் அவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் தமிழ்நாட்டில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள சிறிய ஊரான வேளாங்கண்ணியில் அன்னைமரியா காட்சி அளித்ததால் அவர் வேளாங்கண்ணி அன்னை என அழைக்கப்படுகிறார். இத்தாய் மனிதரின் உடலையும், உள்ளத்தையும் அற்புதமாய் குணமாக்கி வருகிறார். எனவே இவர் நலவாழ்வளிக்கும் ஆரோக்யத்தாய் என அழைக்கப்படுகிறார். பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் வேளாங்கண்ணியில் அன்னைமரியா தோன்றிய முதல் மூன்று காட்சிகளால், முதல் மூன்று புதுமைகளால், மத, இன, மொழி பாகுபாடின்றி அவர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது.
வேளாங்கண்ணி என்றால் விவசாய நிலம் என்று அர்த்தம். இங்கு இருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்தது. நாகப்பட்டினம் அருகே உள்ள இந்துமத பண்ணையார் ஒருவருக்கு இந்துமதச் சிறுவன் ஒருவன் பால்கொண்டு செல்வது வழக்கம். அன்று அச்சிறுவன் பால்கொண்டு சென்றபோது, வழியிலிருந்த அந்தக் குளத்துக்கரையில் ஆலமரத்துக்கு அடியில் பால் செம்பை வைத்துவிட்டு சற்றே இளைப்பாறினான். அப்போது ஓர் அழகிய பெண் கையில் குழந்தையுடன் தோன்றி அக்குழந்தைக்குப் பால் கேட்டார். அந்த அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அச்சிறுவன் குழந்தை இயேசுவுக்குப் கொஞ்சம் பால் கொடுத்தான். பின் எழும்பி பண்ணையார் வீட்டுக்குச் சென்றபோது காலதாமதமாகிவிட்டது. பாலும் குறைந்திருந்தது. இதற்கானக் காரணத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்டான் சிறுவன். பண்ணையார் கோபத்துடன் அச்செம்பை வாங்கிப் பார்த்தபோது பால், செம்பு நிறைய இருந்தது. அதோடு, அப்பாலை சுட வைத்தபோது, பாத்திரம் நிரம்பி பால் பொங்கி வீடு முழுவதும் வழிந்தது. இதைப் பார்த்த பண்ணையார் இது ஏதோ புதுமை என்பதை உணர்ந்து அப்பெண்ணாகிய அன்னைமரியா காட்சி கொடுத்த இடத்துக்கு அச்சிறுவனுடன் சென்றார். மீண்டும் அவர்களுக்கு அன்னைமரியா தோன்றினார். இதையறிந்த அந்தப் பக்கத்து கத்தோலிக்கர் மிகவும் மகிழ்ந்தனர். அந்தக் குளம் மாதா குளம் என அழைக்கப்படுகின்றது. அன்னை காட்சி அளித்த இடத்தில் மக்கள் கூடி செபிக்கத் தொடங்கினர். இவ்வாறு தனது மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முதல் புதுமை நடந்து சில ஆண்டுகள் கழித்து அன்னைமரியா மீண்டும் தோன்றினார்.
வேளாங்கண்ணிக்கு வெளியே நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிச் சிறுவன் ஒருவனுக்கு அன்னை மரியா குழந்தை இயேசுவுடன் தோன்றி, குழந்தை இயேசுவுக்குக் கொஞ்சம் மோர் கேட்டார். அச்சிறுவனும் கொடுத்தான். பின்னர் அன்னைமரியா அச்சிறுவனிடம், `மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஓர் ஆலயம் கட்ட சொல்' என்றார். அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். `அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். `உன்னால் முடியும்' என்றார் அன்னை. அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தரின் வீட்டில் போய்தான் நின்றான். அச்செல்வந்தர் ஒரு கத்தோலிக்கர். அவருக்கும் அன்றிரவு அன்னைமரியா கனவில் தோன்றி ஆலயம் கட்டச் சொல்லியிருந்தார். அவரும் அச்சிறுவனும் புதுமை நடந்த நடுத்திட்டுக்கு வந்தனர். அங்கு கூரையினால் ஓர் ஆலயத்தையும் அவர் கட்டினார். அந்தச் சிற்றாலயம் புனித இடமாக மாறியது. அன்னைமரியாவை ஆரோக்ய அன்னை என அழைக்கலாயினர்.
இன்னும் சிறிது காலம் கழித்து இந்தியாவுக்குப் பயணம் செய்த போர்ச்சுக்கீசிய வணிகர்களின் பாய்மரக் கப்பல் நடுக் கடலில் வீசியப் புயலில் சிக்கியது. அவர்கள் செய்வதறியாமல் திகைத்து அன்னை மரியாவிடம் உதவி கேட்டனர். `அம்மா, நாங்கள் கரை சேரும் இடத்தில் உமக்கு ஓர் ஆலயம் கட்டுவோம்' என்றும் வாக்குறுதி அளித்தனர். மரியன்னையின் உதவியால் புயல் அடங்கி கடல் சீற்றம் தணிந்தது. கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை இறங்கினர். அன்று செப்டம்பர் 8ம் நாள். அன்னைமரியின் பிறந்த நாள் விழா. தங்களைப் பாதுகாப்பாகக் கரை சேர்த்த அன்னைக்கு நன்றியாக, வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தைப் பெரிதாகக் கட்டி எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கு சில தடவைகள் வந்து கலை வண்ணமிக்க பீங்கான் ஓடுகளால் ஆலயப் பீடத்தை அலங்கரித்தனர். தங்கள் கப்பலின் பாய்மரத் தூணை ஆலயக் கொடிமரமாக நாட்டினர். அதில்தான் இன்றளவும் அன்னையின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. போர்ச்சுக்கீசிய வணிகர்கள் கரை சேர்ந்த நாளான அன்னையின் பிறந்த நாளிலேயே வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் நாகப்பட்டினம் பங்கின் துணை ஆலயமாக இருந்து வந்த வேளாங்கண்ணி, 1771ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருள்பணி அந்தோணியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933ம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 1962ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி வேளாங்கண்ணித் திருத்தலத்தை `பசிலிக்கா'வாக உயர்த்தினார். 1985ம் ஆண்டில் மாதா குளத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டது. படிப்படியாக இத்திருத்தல வளாகம் புதுப்பிக்கப்பட்டு ஆராதனை ஆலயம், ஒப்புரவு அருள்சாதன வசதிகள், பயணியர் விடுதிகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சமூக சேவை மையங்கள், இரயில் வசதி என பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐரோப்பாவின் லூர்து நகருக்குச் செல்லும் திருப்பயணிகள் போன்று இங்கும் திருப்பயணிகள் வருவதால் வேளாங்கண்ணித் திருத்தலம், கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படுகின்றது.
வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னையைத் தேடி வரும் அனைவரும், அந்த அன்புத் தாயின் பரிந்துரையால் உடலிலும் மனத்திலும் அற்புதங்களைப் பெற்று மகிழ்வுடன் வீடு திரும்புகிறார்கள். செப்டம்பர் 8, வருகிற ஞாயிறு ஆரோக்ய அன்னை விழாவாகும். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அன்னையின் கொடி ஏற்றப்பட்டு நவநாள் செபங்கள் நடைபெற்று வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.