2013-09-03 16:31:22

விவிலியத் தேடல் – அறிவற்ற செல்வன் உவமை - பகுதி 4


RealAudioMP3 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி, அதாவது, 21-12-2012 என்ற எண் கொண்ட நாளன்று இவ்வுலகம் முடிவடையும் என்ற பரபரப்பை நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் உணர்ந்தோம். மாயன் என்ற காலாச்சாரத்தின் நாள்காட்டி இந்த பரபரப்பை உருவாக்கியிருந்தது. இந்த நாள் நெருங்க, நெருங்க, நம்மில் பலருக்கு பலவகை எண்ணங்கள் எழுந்திருக்கலாம். முடிவே இல்லாமல் நீண்டுசெல்லும் பல்வேறு பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்துவரும் வறியோருக்கு, "அப்பாடா, ஒரு வழியாக இவை எல்லாம் முடிந்துவிடும்" என்ற எண்ணம் எழுந்திருக்கலாம்.
ஆனால், செல்வந்தர்களின் எண்ணங்கள் வேறுபட்டிருந்தன. உலக முடிவிலிருந்து தப்பித்துச்செல்லும் முயற்சிகளில் செல்வந்தர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அமெரிக்காவின் Kansas மாநிலத்தில், பூமிக்கடியில் 200 அடி ஆழத்தில் வீடுகள் கட்டப்பட்டன. ஏவுகணைகளை பூமிக்குள் பாதுகாக்க பயன்படுத்தப்பட்டு, பின்னர் பயனின்றி போன பழையக் கிடங்குகளைப் புதுப்பித்து, இந்த வீடுகள் கட்டப்பட்டன.
அணுகுண்டு தாக்குதலின்போதும் அழியாமல் இருக்கும்வண்ணம் 9 அடி கனமுள்ள சுவர்களால் சூழப்பட்ட இந்தக் கிடங்குகளில் இந்த வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளை 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 4 செல்வந்தர்கள் வாங்கியிருந்தனர் என்ற செய்திகள் அப்போது வெளியாயின. பல மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்த வீடுகளில் பதுங்கிக்கொண்டால், உலக முடிவிலிருந்து தப்பிக்கலாம் என்ற கனவு இச்செல்வந்தர்களுக்கு இருந்தது.
2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வந்தது... போனது... எதிர்பார்த்தபடி உலகம் முடியவில்லை. தற்போது, மாயன் நாள்காட்டியைச் சரிவர கணக்கிடவில்லை என்று சொல்லி, உலக முடிவு பற்றி வேறு பல வதந்திகள் உலவி வருகின்றன.
நாம் இன்று இந்த எண்ணங்களை எழுப்புவதற்குக் காரணம்... உலக முடிவைப்பற்றி சிந்திப்பதற்கு அல்ல. உலகம் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்தும், அந்த முடிவிலிருந்து தாங்களும் தங்கள் குடும்பமும், தங்களிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு, தப்பித்துக் கொள்ளலாம் என்று கனவுகண்ட செல்வந்தர்களைப்பற்றி சிந்திக்கவே நாம் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டோம்.
வாழ்வின் முடிவு, உலகின் முடிவு ஆகியவை, அனைவருக்கும் வரையறுக்கப்பட்டுள்ள நியதிகள். தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தி, தவிர்க்கமுடியாத இந்நியதிகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணும் செல்வந்தர்களின் எண்ண ஓட்டத்தை அலசுவது நமக்குப் பயன்தரும். தங்கள் பணத்தைக் கொண்டு எதையும் வாங்கிவிட முடியும்... மரணத்தையும் விலைபேச முடியும் என்று சிந்திக்கும் செல்வந்தர்கள், உண்மையிலேயே சுய அறிவுடன்தான் சிந்திக்கின்றனரா என்ற கேள்வி எழுகிறது.
மரணத்தை வெல்ல முடியும், அல்லது, மரணத்தை விலைபேச முடியும் என்று சிந்திக்கும் செல்வர்களைப் பற்றி பேசும்போது, அமெரிக்காவில் உள்ள வேறு இரு நிறுவனங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. வியப்பான தகவல்களுக்கு அமெரிக்காவில் பஞ்சமே இருக்காதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்நாட்டில், Michigan மாநிலத்தில் Cryonics Institute என்ற நிறுவனமும், அரிஸோனா மாநிலத்தில் Alcor என்ற நிறுவனமும் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் ஒரே இலக்கு... இறந்த உடல்களை அழிவின்றி காப்பது.
மனித உடல் இறந்ததும், அவ்வுடலில் ஒரு சில வேதியப் பொருள்கள் செலுத்தப்பட்டு, அவ்வுடல் நைட்ரஜன் திரவத்தில் மிதக்கவிடப்படுகின்றது. இந்த ஏற்பாட்டினால், உடலின் திசுக்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன, இரத்தமும் உறையாமல் பாதுகாக்கப்படுகின்றது. இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் உள்ள எண்ண ஓட்டம் என்னவெனில், பின்னொரு காலத்தில், அதாவது, நூறு அல்லது இருநூறு ஆண்டுகள் சென்று, இறந்த உயிரை மீண்டும் கொணர்வதற்கு ஏற்ற ஆய்வுகளில் மனிதர்கள் வெற்றி அடையக்கூடும். அவ்வேளையில், பாதுகாக்கப்பட்டுள்ள இவ்வுடல்கள், இறந்தபோது இருந்த அதே நிலையில் மீண்டும் உயிர்பெற்று வாழும் வாய்ப்பு உண்டு என்பதே இவர்களின் எண்ணம்.
இவ்விரு நிறுவனங்களில் இறந்த உடலைப் பாதுகாக்க 30,000 டாலர்கள் முதல் 80,000 டாலர்கள் வரை செலவாகிறது. பல செல்வந்தர்களின் உடல்கள் இந்நிறுவனங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 'வாழ்வை நீட்டிக்கும் நிறுவனம்' (Life Extension Foundation) என்று இந்நிறுவனங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
வாழ்வை நீட்டிக்கும் முயற்சி, இன்று நேற்றல்ல, மனித வரலாற்றில் தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிதான். எகிப்து மன்னர்களின் உடல்கள் 'மம்மி' என்ற முறையில் மாற்றப்பட்டு, பிரமிடுகளில் புதைக்கப்பட்டது, அவர்கள் வாழ்வை நீட்டிக்கும் முயற்சியைப் பறைசாற்றுகின்றது.
எகிப்தின் பிரமிடுகளில் கொடுமையான ஒரு சில உண்மைகளும் புதைந்துள்ளன. இந்த மன்னர்கள் மீண்டும் மறுவாழ்வில் காலடி எடுத்துவைக்கும்போது, அவர்களுக்குப் பிடித்த, அவர்களுக்குப் பழக்கமான ஓர் உலகம் இவர்களைச் சுற்றி இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் பயன்படுத்திய ஆடைகள், அணிகலன்கள், அவர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகள் அனைத்தும் பிரமிடுகளில் புதைக்கப்பட்டன. அத்துடன் கதை முடியவில்லை. அந்த மன்னர்களுக்கு மிகவும் பிடித்தமான செல்ல மிருகங்கள் அவர்களுடன் உயிரோடு புதைக்கப்பட்டன. இதையும் தாண்டி, மன்னர்களுக்கு மிகவும் விசுவாசமாகப் பணியாற்றியவர்களும் உயிரோடு பிரமிடுகளில் புதைக்கப்பட்டனர். மன்னர்கள் மரணத்தைத் தாண்டி, எவ்வித மாற்றமும் இன்றி தங்கள் வாழ்வைத் தொடரவேண்டும் என்ற ஆர்வத்தில் மேற்கொள்ளப்பட்ட கொடுமையான முயற்சிகள் இவை.
பிறந்த ஒவ்வோர் உயிரும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும் என்பது இறைவன் வகுத்த இயற்கை நியதி. மாற்றமுடியாத, மறுக்கமுடியாத இந்த உண்மையை, வாழும் காலத்தில் முடிந்தவரை மறந்துவிட தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தும் செல்வர்கள், மரணம் நெருங்கும் வேளையில், அதை மறுக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். செல்வத்தைக் கொண்டு எதையும் மாற்றிவிடலாம் என்று எண்ணும் செல்வர்கள் தங்கள் சுய அறிவுடன்தான் சிந்திக்கின்றனரா என்ற கேள்வி நமக்குள் மீண்டும் எழுகிறது.
'அறிவற்ற செல்வன்' என்ற உவமையில் இயேசு நமக்கு அறிமுகப்படுத்தும் செல்வன் இத்தகைய எண்ண ஓட்டங்களுக்கு விதிவிலக்கல்ல. உடலளவில் தான் பெற்ற வாழ்வும், தன்னைச் சுற்றி குவிந்துள்ள செல்வங்களும் நிரந்தரமாக இருக்கும் என்ற எண்ணமே, இச்செல்வனுக்கு 'அறிவிலியே' என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது. இந்தப் பட்டத்தை இச்செல்வனுக்கு தந்தது கடவுள்.
இயேசு கூறிய வேறு எந்த உவமையிலும் இறைவன் பேசுவதாக இல்லை என்று முன்னர் குறிப்பிட்டோம். தனித்துவம் மிக்க வகையில் இந்த உவமையில் மட்டுமே பேசும் கடவுள் என்ன சொன்னார்? "அறிவிலேயே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" (லூக்கா 12: 20)
செல்வனை அறிவிலேயே என்று அழைப்பதற்கு, இறைவன் இரு காரணங்களைத் தருவதுபோல் தெரிகிறது.

தங்களுக்கு மரணமே இல்லை, அல்லது, மரணத்தையும் தாண்டி வாழும் வழிகளை, தங்கள் செல்வத்தால் வாங்கிவிட முடியும் என்று எண்ணும் செல்வர்களின் பிரதிநிதியாக நிற்கும் 'அறிவற்ற செல்வனை' இறைவன் பரிதாபமாகப் பார்த்து, 'அறிவிலியே' என்று அழைக்கிறார்.
இறைவன் இவ்விதம் பரிதாபப்படுவதற்கு இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள இரண்டாவது காரணமும் நம் கவனத்தை ஈர்க்கிறது. தாங்கள் விட்டுச்செல்லும் செல்வங்கள் யாரைச் சென்றடையும் என்பதை சரிவர உணராமல், சேர்ப்பதில் மட்டும் ஒருவகை வெறியுடன் செயல்படும் செல்வர்களைப்பற்றி செய்திகள் அறிவோம். செல்வத்தைக் குவிப்பதில் தங்கள் உடல்நலன் முழுவதையும் செலவிடும் செல்வர்கள் பலர், இறுதியில், சேர்த்துவைத்த செல்வத்தை மருந்துகளுக்கே பெரும்பாலும் செலவிடும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். அல்லது, தாங்கள் சேர்த்த செல்வத்தை அனுபவிக்காமலேயே இவ்வுலகிலிருந்து விடைபெறுகிறார்கள். இத்தகையோரைக் கண்டு மிகவும் பரிதாபப்படுகிறோம்.
நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? என்று கடவுள் எழுப்புவது பயனுள்ள கேள்வி. இந்தப் பயனுள்ள பாடத்தை சீராக்கின் ஞானம் என்ற நூலின் 11ம் பிரிவில் நாம் இவ்விதம் வாசிக்கிறோம்:
சீராக்கின் ஞானம் 11: 18-19
சிலர் தளரா ஊக்கத்தினாலும் தன்னல மறுப்பினாலும் செல்வர் ஆகின்றனர். அவர்களுக்கு உரிய பரிசு அதுவே. நான் ஓய்வைக் கண்டடைந்தேன்: நான் சேர்த்துவைத்த பொருள்களை இப்போது உண்பேன் என அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்வர். இது எத்துணைக் காலத்துக்கு நீடிக்கும் என்பதையும் தங்கள் சொத்துகளைப் பிறரிடம் விட்டுவிட்டு இறக்க நேரிடும் என்பதையும் அவர்கள் அறியார்கள்.
செல்வத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த அறிவற்ற செல்வனுக்கு, இன்னும் அவ்விதமே வாழ்ந்துகொண்டிருக்கும் பலருக்கு யோபு கூறும் வார்த்தைகள் பொருளுள்ளவை:
யோபு 32: 24, 25, 28
தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில், 'பசும்பொன் என்உறுதுணை' என்று பகர்ந்திருப்பேனாகில், செல்வப் பெருக்கினால், அல்லது கை நிறையப் பெற்றதால் நான் மகிழ்ந்திருப்பேனாகில்,... அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய பழியாய் இருக்கும்: ஏனெனில், அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.
தாங்கள் சேர்த்துவைத்துள்ள செல்வத்தையே பெரிதும் நம்பிவாழும் செல்வர்கள், தங்கள் வாழ்வில், அல்லது தங்களைச் சுற்றி, நம்பிக்கைக்குரிய நண்பர்களை, பணியாளர்களை சேர்க்கமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு விடையளிக்க வருகிறது லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் நாம் காணும் மற்றொரு செல்வனின் உவமை. இது நமது அடுத்தத் தேடலின் மையமாகிறது.







All the contents on this site are copyrighted ©.