2013-09-03 16:19:38

வத்திக்கானில் சிரியாவின் அமைதிக்கானச் செப வழிபாட்டில் கலந்து கொள்வதற்கு ஒரு முஸ்லிம் ஆன்மீகத் தலைவருக்கு விருப்பம்


செப்.,03,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில் இம்மாதம் 7ம் தேதி இரவு 7 மணிக்கு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் சிரியாவின் அமைதிக்காக நடைபெறும் செப வழிபாட்டில் அனைத்துத் துறவியரும் கலந்து கொள்ளுமாறு திருப்பீட அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz அனைத்து துறவு சபைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், இச்செப வழிபாட்டில் கலந்து கொள்வதற்கு, சிரியாவிலுள்ள சுன்னி இஸ்லாம் பிரிவின் ஆன்மீகத் தலைவர் Ahmad Badreddin Hassou கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிரியாவிலும் உலகெங்கிலும் அமைதி நிலவச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் உலகினர் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பு தன்னை மிகவும் ஈர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் Hassou.
ஆயினும் தற்போதைய சூழலில் இது இயலுமா என்ற சந்தேகம் இருக்கும்வேளை, வருகிற சனிக்கிழமையன்று சிரியாவிலுள்ள அனைத்து மசூதிகளிலும் அனைத்து முஸ்லிம்களும் இதே கருத்துக்காகத் திருத்தந்தையுடன் சேர்ந்து செபிக்கவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அரசியலிலிருந்து விலகி உண்மையான ஆன்மீகத் தலைவராக, சிரியா மக்களின் நலனில் உண்மையாகவே அக்கறைகொண்டு பேசுகிறார் என சிரியா முஸ்லிம்கள் கருதுகின்றனர் என்று Fides செய்தி நிறுவனம் கூறுகிறது.
மேலும், சிரியாவிலிருந்து 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.