2013-09-03 16:09:33

திருத்தந்தை பிரான்சிஸ் : வார்த்தைகளால் பிறரை ஒருபொழுதும் கொலைசெய்யாதீர்கள்


செப்.,03,2013. இறைவன் இருக்குமிடத்தில் வெறுப்போ, பொறாமையோ அல்லது எரிச்சலோ இருக்காது, அதோடு, பிறரைக் கொல்லும் புறணிப்பேச்சுக்கள் இருக்காது என்று இத்திங்கள் காலையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டு மாத கோடை கால இடைவெளிக்குப் பின்னர் வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் தனது வழக்கமான திருப்பலியை இத்திங்கள் காலை மீண்டும் நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
லூக்கா நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள, இயேசுவுக்கும், நாசரேத்தூர் மக்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், அம்மக்களிடம் விசுவாசம் குறைபடுகின்றது என்று இயேசு சொல்லியதுபோது அவர்கள் கடுஞ்சினமுற்று அவரை ஊருக்கு வெளியே துரத்தி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர் என்றார்.
அச்சமயத்தில் இயேசுவின் அருள்மொழிகளைக் கேட்டு உருவாகிய வியப்புச்சூழல் குற்றத்தில் முடிந்தது, அவர்களின் பொறாமையும் எரிச்சலும் இயேசுவை அவர்கள் கொல்வதற்கு இட்டுச்சென்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
நாம் புறணி பேசுவதற்குப் பழகியுள்ளோம், இதனால் நம் குழுக்களும், ஏன் நம் குடும்பங்களும் எத்தனை தடவைகள் நரகமாக மாறியிருக்கின்றன, அச்சமயங்களில் நம் வார்த்தைகளால் நம் சகோதரரைக் கொலைசெய்யும் குற்றவாளிகளாகிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு குடும்பமும், ஒரு குழுவும் பொறாமையால் அழிக்கப்படலாம், இந்தப் பொறாமை இதயத்தில் தீமையை விதைத்து அடுத்தவரைப் பற்றி மோசமாக பேசுவதற்குக் காரணமாகின்றது என்று மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.