2013-09-02 15:28:22

வாரம் ஓர் அலசல் – தேவை மனிதர்கள்


செப்.,02,2013. RealAudioMP3 ஒரு சீடர் தனது குருவைக் கவுரவப்படுத்தும்பொருட்டு, பரணி என்ற பாட்டு வகையை எழுதி அதை அறிவாளிகள் மத்தியில் படிக்க முயற்சித்தார். அப்போது அந்த அறிவாளிகள், பரணி என்பது போரில் ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்ற நாயகனைப் புகழ்ந்து பாடும் கவிதைப்பாங்கு, அது துறவிகளைப் புகழ்ந்து பாட ஏற்றது அல்ல என்று மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தார்கள். அப்போது அச்சீடர் அவர்களிடம், நாம் அனைவருமே என் குருவிடமே சென்று இது குறித்து தீர்வு காண்போம் என்று கூறினார். குருவிடம் எல்லாரும் சென்று விடயத்தைச் சொன்னார்கள். குரு மௌனமாக இருந்தார். சில நாள்கள் கழிந்தன. குரு மட்டுமல்ல, அந்த அறிவாளிகள் அனைவரும் அங்கேயே மௌனமாக இருந்தார்கள். தாங்கள் ஏன் இங்கே வந்தோம் என்கிற எண்ணமே அவர்கள் மனத்திலிருந்து சில நாள்களிலேயே மறைந்துபோகுமளவுக்கு அந்த மௌனம் அடர்த்தியாக இருந்தது. நான்கு நாள்களுக்குப் பிறகு குரு சற்றே அசைந்தார். அந்த அறிவாளிகளுக்கும் உள்ளுணர்வு ஏற்பட்டது. ஆயிரம் யானைகளைக் கொல்வது ஒன்றும் பெரிய செயல் அல்ல, மாறாக, தன்முனைப்பு என்னும் காட்டுயானைகளை வென்று காட்டுவதே உண்மையான ஆற்றல். எனவே இவர்மீது பரணி பாடுவது பொருத்தமே என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அன்பர்களே, இரமண மகரிஷி அவர்கள் சொன்ன இக்கதை நமக்கு ஓர் ஆழமான உண்மையை உணர்த்துகின்றது. நம் மௌனத்தைத் தீவிரப்படுத்தும்போதுதான் பேச்சின் ஆற்றலும் கூர்மையும் வெளிப்படுகின்றன. அதேசமயம் பேச வேண்டிய நேரத்தில் பேசாமலிருப்பது மௌனமாகாது, அது அமுக்கம், அழுத்தம் மற்றும் கமுக்கமாகும்.
ஆம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமலிருப்பது மௌனமாகாது, அது அமுக்கம், அழுத்தம், கமுக்கம். இந்நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உரக்கப் பேச வேண்டிய நேரமிது, உறுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய நேரமிது என்றுதான் உலக நாடுகளின் தலைவர்களையும் அனைத்துலக சமுதாயத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சிரியா அரசுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்கள் நடத்த அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவதும், அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களுமே திருத்தந்தையின் இவ்வழைப்புக்குக் காரணம். வழக்கமாக அந்தந்த ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து நண்பகல் மூவேளை உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ், இஞ்ஞாயிறு மூவேளை உரை முழுவதும் உலகின் அமைதிக்காகவே, குறிப்பாக, சிரியாவில் அமைதி திரும்ப குரல் கொடுத்தார். இன்றைய உலகில் இடம்பெறும் பல சண்டைகள், எனது துன்பத்துக்கும் கவலைக்கும் பெருமளவில் காரணமாகின்றன, இந்நாள்களில் சிரியாவிலிருந்து வெளிவரும் வேதனைதரும் செய்திகள் எனது இதயத்தை அதிகமாக வேதனைப்படுத்துகின்றன. எனவே உலகெங்கும் அமைதி நிலவ, குறிப்பாக, மோதல்கள் நிறைந்துள்ள சிரியாவில் அமைதி திரும்ப உலகின் அனைத்து மக்களும் செபிக்குமாறு அவர் அழைப்புவிடுத்தார். இக்கருத்துக்காக உலகெங்கும் இருக்கின்ற கத்தோலிக்கத் திருஅவை செப்டம்பர் 07, வருகிற சனிக்கிழமையன்று செபம் மற்றும் நோன்பைக் கடைப்பிடிக்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். உலகிலும், நம் ஒவ்வொருவர் இதயங்களிலும் அமைதி நிலவ நாம் செபிக்குமாறு இஞ்ஞாயிறு டுவிட்டர் பக்கத்திலும் எழுதியுள்ளார் திருத்தந்தை.
RealAudioMP3 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதுபோல, இந்நாள்களில் சிரியா குறித்து வெளியாகும் செய்திகள் நன்மனம்கொண்ட அனைத்து மனிதரையும் வேதனையில் ஆழ்த்துகின்றன. சிரியாவில் அரசுத்தலைவர் பஷர்-அல்-ஆசாத் பதவி விலகக்கோரி கிளர்ச்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுத்தலைவர் ஆசாத்தை பதவி விலகும்படி, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தியும், அவர் மறுத்துவிட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக, இந்த நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா, சிரியாவில் வேதிய ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது, எனவே சிரியா மீது தாக்குதல் நடத்துவது உறுதி என தெரிவித்துள்ளார். பிரான்சும், இஸ்ரேலும் அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இதனால் ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் ஒருசில பணக்கார நாடுகள் தங்களின் ஆயுத விற்பனை அமோகமாக நடக்கப்போகிறது என்ற ஆவலில் உள்ளன எனச் சொல்லலாம். ஆனால் இரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், சிரியா வேதிய ஆயுதங்களை வைத்துள்ளது, அவற்றைப் பொதுமக்கள்மீது பயன்படுத்தியுள்ளது என்பதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு ஆதாரங்கள் வைத்திருந்தால் அதை ஐ.நா. ஆய்வாளர்களிடமும் ஐ.நா. பாதுகாப்பு அவையிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிரியாமீது இராணுவத் தாக்குதல்கள் நடத்த மதில்மேல் பூனையாக சில நாடுகள் காத்திருக்க, சிரியாவில் அப்பாவி மக்கள், துப்பாக்கிகளின் நச்சுப் புகைகளைச் சுவாசித்துக்கொண்டு, மரணத்தோடு உரசியும் விலகியும் அச்சநடுக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். இரவில் உறங்காமல், வெயிலுக்கு ஒதுங்காமல், தாகத்துக்குப் பருகாமல், பசிக்குப் புசிக்காமல் ஆயுதச் சப்தங்கள் மௌனமாக்கப்படும் நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர் அம்மக்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறியிருப்பது போன்று, சண்டைக் கலாச்சாரமோ முரண்பாட்டுக் கலாச்சாரமோ மக்களுக்கிடையே, மக்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது, மாறாக, உரையாடல் கலாச்சாரமே அமைதிக்கான ஒரேவழி. வன்முறை, போர், மோதல் ஆகியவை உரையாடல், ஒப்புரவு, அன்பு ஆகிய சக்திகளால் தோற்கடிக்கப்பட வேண்டும். இன்றைய உலகின் அமைதியின்மைக்கு அடிப்படை காரணம் அன்புப் பற்றாக்குறையே. அன்பின்றி இவ்வுலகம் இயங்காது. ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், ஏழைகள் போன்றோரின் அன்னையாய் விளங்கிய கல்கத்தா அன்னை தெரேசா இறைவனடி எய்திய நாளை (செப்டம்பர் 5), வருகிற வியாழனன்று நினைவுகூருகிறோம். அன்னை தெரேசா இறந்த இந்த செப்டம்பர் 5ம் தேதியை அனைத்துலக பிறரன்பு நாளாக 2012ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை அறிவித்து கடைப்பிடித்து வருகிறது. கல்வி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிறரன்பை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டுமென்று கேட்டுள்ளது ஐ.நா. பொது அவை.
பிறரன்பு, பொதுவாழ்வில் ஏற்படும் அனைத்து மனிதாபிமான நெருக்கடிகளையும் அகற்றி, கலாச்சாரம், அறிவியல், விளையாட்டு, கலாச்சாரப் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க உதவுகின்றது. பிறரன்பு, ஓரங்கட்டப்பட்ட மற்றும் வாய்ப்புகளற்ற மக்களின் உரிமைகளை வளர்ப்பதோடு போர் இடம்பெறும் சூழல்களில் மனிதாபிமானத்தை, மனிதத்தைப் பரப்புகின்றது. இன்று சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பது பல நல்ல உள்ளங்களின் பிறரன்பாலே. இந்தப் பிறரன்பு இருந்தால், ஏற்கனவே இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் சிரியாமீது சில மேற்கத்திய நாடுகளும் அமெரிக்க ஐக்கிய நாடும் இராணுவத் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டு வராது. இந்தப் பிறரன்பு இருந்தால் சிரியாவில் போரிடும் குழுக்கள் ஆயுதங்களைக் கீழே போட்டிருக்கும்.
ஆம். கவிஞர் எஸ்.முருகவேல் எழுதியிருப்பதுபோல, அமைதியைக் காக்கும் சாக்கில் ஆயுதங்களை வழிபடும் நாடுகளுக்கிடையே இன்னுமோர் மகாத்மா இன்றைய உலகுக்குத் தேவை. தேவையில்லை என்று வீதியில் சிறைவைத்த சிறுசுகளுக்கும் பெருசுகளுக்கும் சேவையிலை நீட்ட இன்னுமோர் அன்னை தெரேசா இன்றைய உலகுக்குத் தேவை. ஏட்டுக்காக எழுத்தையும், காசுக்காகக் கருத்தையும் கக்கும் சாயமிழந்தவர்களுக்கிடையே நாட்டைப் பாட, சாரம்மிக்க மகாகவியாய் இன்னுமோர் பாரதி இன்றைய உலகுக்குத் தேவை. ஊழலிலும் நாகரிகமற்ற விமர்சன உருமலிலும் மக்கள் நலனில் அக்கறையற்ற அரசியல்வாதிகளுக்கிடையே இன்னுமோர் தூய்மைத்தூண் கக்கன் இன்றைய உலகுக்கு தேவை. இன்று தேவை, தலைவர்கள் அல்ல, நல்ல மனிதர்கள். ஏனெனில் நல்ல மனிதர்களிலிருந்துதான் நல்ல தலைவர்கள் உருவாகுகிறார்கள்.
ஒரு சமயம் ஒரு பெண் மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்த சாது ஒருவரைத் தேடிச் சென்று தனது கணவர் பற்றிப் புகார் சொன்னார். தனது கணவர் மூன்றாண்டுகளாகப் போருக்குச் சென்று திரும்பியதிலிருந்து எதிலும் ஈடுபாடு கொள்ளாமல், யாரிடமும் பேசாமல் இருக்கின்றார். அப்படிப் பேசினாலும் கடுமையாக நடந்து கொள்கிறார், பிடிக்காத உணவைப் பரிமாறினால் வெளியேறி விடுகிறார், அவரைக் குணப்படுத்த லேகியம் ஒன்றைத் தாருங்கள் என்று கேட்டார் அப்பெண். அதற்கு அந்தச் சாது, இந்த லேகியம் தயார் செய்ய, புலியின் மீசையிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கிக் கொண்டுவந்து நீ தரவேண்டும் எனச் சொன்னார். அய்யோ அது கஷ்டமாச்சே என்று அப்பெண் சொல்ல, அந்த முடி இருந்தால்தான் நீ கேட்கும் லேகியத்தைச் செய்து தரமுடியும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் சாது. அன்று இரவு சோறையும் கறிக்குழம்பையும் எடுத்துக்கொண்டு புலி நடமாடும் மலைப்பகுதிக்குச் சென்றார் அப்பெண். புலிக் குகைக்கு வெளியே நின்றவாறே உணவருந்த அழைத்தார் அப்பெண். புலி வரவே இல்லை. இப்படி அடுத்தடுத்து இரண்டு இரவுகள் நடந்தன. மூன்றாவது இரவில் புலி வெளியே வந்து பார்த்துவிட்டு உள்ளே போய்விட்டது. நான்காவது நாள் புலி வெளியே வந்து அப்பெண்ணின் கண்களை உற்றுப்பார்த்த பின்னர் அவ்வுணவை உண்டது. இப்படி ஆறுமாதங்கள் நடந்தன. அப்பெண்ணும் புலியும் நண்பர்களானார்கள். ஒருநாள் புலியைத் தடவிக்கொண்டே அதன் மீசையிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கினார் அப்பெண். புலியும் கோபப்படவில்லை. அதைக்கொண்டுவந்து சாதுவிடம் கொடுத்தார் அப்பெண். சாது அம்முடி புலியின் முடிதான் என்பதை உறுதிசெய்துவிட்டு பின் அதைத் தீயில் போட்டுவிட்டார். அப்பெண்ணுக்கு அப்படியொரு வருத்தம். அப்போது அந்தச் சாது அப்பெண்ணிடம், நீ அன்பாகப் பேசி, பணிவிடை செய்து, காட்டில் வாழும் ஒரு கொடிய புலியையே உன் அன்பால் அடக்கிவிட்டாய். உன் கணவர் என்ன, புலியைவிடக் கொடியவரா, அவரையும் உன் அன்பாலும் அரவணைப்பாலும் திருத்தி விடலாமே என்றார். உண்மையை உணர்ந்தபடி வீட்டுக்குத் திரும்பினார் அப்பெண்.
அன்போடு மேற்கொள்ளப்படும் முயற்சி எல்லாக் கட்டுப்பாடுகளையும் உடைத்துவிடும். இன்றைய உலகுக்குத் தேவை அன்புள்ளம் கொண்ட மனிதர்கள், அமைதி விரும்பும் நல்ல மனிதர்கள். நாம் யார்?








All the contents on this site are copyrighted ©.