2013-08-31 15:41:57

பேராயர் Roham : இராணுவத் தாக்குதல்களை நடத்துவது எளிது, அதன் பின்விளைவுகளை நிறுத்துவது கடினம்


ஆக.,31,2013. சிரியாவுக்கெதிராக இராணுவத் தாக்குதல்களை நடத்துவது எளிது, ஆனால் போரையும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் இந்தத் தாக்குதல்களின் பின்விளைவுகளையும் நிறுத்துவது கடினம் என்று Jazirah மற்றும் Euphrates சிரிய-ஆர்த்தடாக்ஸ் பேராயர் Eustathius Matta Roham கூறியுள்ளார்.
சிரியாவின் தற்போதைய நிலை குறித்து கவலையுடன் Fides செய்தி நிறுவனத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ள பேராயர் Roham, வெளிநாட்டு இராணுவத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடாது எனவும், சிரியாவில் அமைதி திரும்ப வேண்டுமெனவும் அந்நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் மக்கள் செபித்துக்கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இன்னும், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறைத் தலைவர் முதுபெரும் தந்தை Fouad Twal சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அப்பாவி மக்கள்மீது வேதிய ஆயுதத் தாக்குதல்களை நடத்தியது சிரியா அரசுதான், புரட்சிக் குழுக்கள் அல்ல என்பது இன்னும் உறுதியாகவில்லை, இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அனைத்துலக அளவில் அதிகாரம் தரப்படவில்லை, மக்களாட்சியின் காவல்துறையாக அமெரிக்கர்கள் செயல்படக்கூடாது, புதிய இராணுவத் தாக்குதல்களின் விளைவு சிரியாவில் மேலும் இரத்தம் சிந்த வைக்கும், இத்தாக்குதல்கள் கவனமாக நடத்தப்பட்டால்கூட மத்திய கிழக்குப் பகுதியின் நிலையற்றதன்மையை மேலும் மோசமடையச் செய்யும் என விளக்கியுள்ளார் முதுபெரும் தந்தை Twal.

ஆதாரம் : Fides /CWN







All the contents on this site are copyrighted ©.