2013-08-29 15:27:43

திருத்தந்தை பிரான்சிஸ் இளையோரிடம் : அழகும், நன்மைத்தனமும், உண்மையும் நிறைந்ததாக வருங்காலத்தை அமையுங்கள்


ஆக.,29,2013. இப்புதன் பிற்பகலில் ஏறக்குறைய 500 இத்தாலிய இளையோர் திருப்பயணிகளை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், துணிச்சலுடன் முன்னோக்கிச் சென்று ‘ஆர்வமாய் ஓங்கிக் குரல் எழுப்புங்கள்’ என்று கூறினார்
நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடுவதற்காக உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொண்ட இத்தாலியின் Piacenza-Bobbio மறைமாவட்டத்தின் ஏறக்குறைய 500 இளையோர் திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் தான் இவர்களைச் சந்திக்க விரும்பியதற்கான காரணத்தை எடுத்துச் சொன்னார்.
இளையோராகிய நீங்கள் உங்கள் இதயங்களில் நம்பிக்கையின் வாக்குறுதியைக் கொண்டுள்ளீர்கள், நீங்கள் நம்பிக்கையை எடுத்துச் செல்பவர்கள், உண்மையில் நீங்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டு வருங்காலத்தை நோக்கிக் கொண்டிருக்கின்றீர்கள், நீங்களே வருங்காலத்தை உருவாக்குகின்றவர்கள் என்பதால் உங்களைச் சந்திக்க விரும்பினேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அழகு, நன்மைத்தனம், உண்மை ஆகிய மூன்றின்மீது இளையோர் ஆவல் கொண்டிருக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், உங்கள் இதயத்திலுள்ள இம்மூன்றையும் ஆர்வமாய் எடுத்துச்சென்று ஓங்கிக் குரல் எழுப்புங்கள் என்றும் இளையோரிடம் கூறினார்.
ஓங்கிக் குரல் எழுப்புங்கள் என்று சொல்லும்போது, நிறையத் தீமை செய்யும் கலாச்சாரத்துக்கு எதிராக, அழகு, நன்மைத்தனம், உண்மை ஆகிய விழுமியங்களுடன் துணிச்சலுடன் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும் என்று தான் கூற விரும்புவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.