2013-08-28 15:37:18

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை இலங்கையில் மேற்கொண்டுள்ள பயணம்


ஆக.28,2013. காணாமல் போனோர் விவகாரம் உட்பட, இலங்கையில் உள்நாட்டு போரின்போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளில் ஆழமாகக் கவனம் செலுத்தி, அவற்றுக்கு தீர்வுகாண தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள் வாக்களித்துள்ளார்.
ஆகஸ்ட் 25 இஞ்ஞாயிறு முதல் ஆகஸ்ட் 30 இவ்வெள்ளிக் கிழமை முடிய ஐ.நா.வின் உயர் அதிகாரி நவி பிள்ளை அவர்கள் இலங்கையில் மேற்கொண்டுள்ள பயணத்தையடுத்து கொழும்புவில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டு போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் சென்று ஐ.நா.வின் இந்த உயர் அதிகாரி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளதை ஊடகங்கள் பலவாறாக விமர்சனம் செய்துள்ளன.
இலங்கை உள்நாட்டுப் போரில் எவ்விதத் தடயமும் இன்றி காணாமற்போன தங்கள் உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கிய 800க்கும் அதிகமானோர், குறிப்பாக பெண்கள், நவி பிள்ளை அவர்களைச் சந்திக்க முயன்றும், காவல் துறையினரால் அவர்கள் தடை செய்யப்பட்டனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள சிங்கள மக்களால் 1981ம் ஆண்டு தீயிட்டு அழிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தில், நவி பிள்ளை அவர்களுடன் அரசு அதிகாரிகள் மேற்கொண்ட ஒரு சந்திப்பின்போது, வெளியில் கூடியிருந்த பலர் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews / UCAN








All the contents on this site are copyrighted ©.