2013-08-28 13:06:53

ஆகஸ்ட் 29, 2013. கற்றனைத்தூறும்...... ஓசோன் படலம்


இன்றுவரை புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஓசோன் படலமும் (Ozone Layer) ஒரு முக்கிய காரணம் என்பதை எவராலும் மறுக்க இயலாது! இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களை கொண்ட வாயு, ஆக்ஸிஜன் என்றால், மூன்று ஆக்ஸிஜன் அணுக்களை கொண்ட வாயு ஓசோன்! 1840-ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனரான கிறிஸ்டியன் ஃப்டரிச் சோன்பியன் (Christian Friedrich Schonbein, 1799 – 1868) என்பவரால் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாயுக்கள் சற்று துர்நாற்றம் வீசும் தன்மைகொண்டதாக இருந்ததால் நாற்றம் (Smell) என்று பொருள்படும் கிரேக்கமொழி சொல்லான ஓசோன் (Ozone) என்ற பெயரை இந்த வாயுக்களுக்கு சூட்டினார் ஃப்டரிச் சோன்பியன்!
புவியின் மேற்பரப்பிலிருந்து 17 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரையிலான வளிமண்டலப்பகுதி (called as stratosphere) முழுவதும் ஏறத்தாழ 98 விழுக்காடு ஓசோன் வாயுக்களால் நிரப்பப்பட்டிந்தாலும்கூட புவியின் மேற்பரப்பிலிருந்து 25 முதல் 35 கிலோமீட்டர் வரையிலான வளிமண்டலபகுதியில்தான் இவ்வாயுக்களின் அடர்த்தி அதிகம். இதைத்தான் நாம் ஓசோன் படலம் (Ozone Layer) என்று அழைக்கிறோம்! பூமியில் உள்ள மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்களின் (Ultra Violet Rays; Known as UV) தாக்குதல்களிலிருந்து காக்கும் அதிமுக்கிய பணியை இந்த ஓசோன் படலம் மேற்கொண்டுவருகிறது.
ஃப்ரிட்ஜ் (Fridge), ஃப்ரீசர் (Freezer) மற்றும் ஏர்கண்டிஷ்னர்கள் (Air-Conditioner) உள்ளிட்ட குளிர்சாதன பெட்டிகளில் குளிரை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் (Chlorofluorocarbon, Knows as CFC) என்பதிலுள்ள கட்டுப்பாடற்ற வேதிவினையூக்கியான (Free Radical Catalyst) குளோரின் (Chlorine) தனித்து நிற்கும் ஆக்ஸிஜன் அணுக்களுடன் (O) இணைந்து வேதிவினைபுரிந்து குளோரின் மோனாக்சைடுகளை (Chlorine Monoxide; ClO) தோற்றுவித்துவிடுகின்றன! இதனால் ஆக்ஸிஜன் அணுக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு ஓசோன் வாயுக்கள் மீண்டும் உருப்பெறும் வேதிவினை தடைபட ஆரம்பிக்கும்! இதன் காரணமாக ஓசோன் வாயுக்களின் எண்ணிக்கை குறைந்து அந்த இடத்தில் ஓசோன் வாயுக்களின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்! இதைத்தான் நாம் ஓசோனில் ஓட்டை என்கிறோம்! அடர்த்தி குறைந்த இப்பகுதியின் வாயிலாக புறஊதாக்கதிர்கள் எளிதாக உள்நுழைந்து புவியை அடைகின்றன.
வளிமண்டலத்தில் இருந்து இந்த ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும்போது உடனடி எதிர்விளைவாக புவியின் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பிக்கும், இதன் காரணமாக பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர ஆரம்பிக்கும்! மற்றொருபுறம் அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்க ஆரம்பிக்கும்! மிகமுக்கியமாக மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களையும் இக்கதிர்கள் நேரடியாக தாக்கும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தோல் புற்றுநோய் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களை உண்டாக்கிவிடும். இக்கதிர்கள் தாவரங்களைத் தாக்கும்போது அவற்றின் உற்பத்தி திறன் குறைய ஆரம்பிக்கும்!
கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, உலகம் முழுவதும் இன்றும் 5 முதல் 10 விழுக்காடு வரை குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது! இப்போதுவரை வளிமண்டலத்தில் வெளியேற்றம் செய்யப்பட்ட குளோரின் வாயுக்களின் தாக்குதல்களிலிருந்து ஓசோன் படலம் மீள்வதற்கு இன்னும் 100 முதல் 150 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றனர் அறிவியலாளர்கள்.

ஆதாரம் : சித்தார்கோட்டை








All the contents on this site are copyrighted ©.