2013-08-27 15:53:12

சிரியாவின் தற்போதைய நெருக்கடிக்குப் பதிலளிக்க வேண்டியது அனைத்துலக சமுதாயத்தின் கடமை, திருப்பீடத் தூதர்


ஆக.,27,2013. சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் அழுகுரலுக்கு முன்பாக அனைத்துலகச் சமுதாயம் மௌனம் காக்கக் கூடாது என்று சிரியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி கூறினார்.
சிரியாவில் கடந்த சில நாள்களில் இடம்பெற்ற பயங்கரமானத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் பலியாகியுள்ளவேளை, இத்தாக்குதல்கள் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் செனாரி, சிரியாவின் தற்போதைய நெருக்கடிக்குப் பதிலளிக்க வேண்டியது அனைத்துலகச் சமுதாயத்தின் கடமை என்று கூறினார்.
சிரியாவில் இடம்பெற்றுள்ள அண்மைத் தாக்குதல்களின் பாதிப்புக்கள் நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன என்றுரைத்த பேராயர் செனாரி, அப்பாவிச் சிறாரின் அழுகுரல்களைத் தான் கேட்டதாகவும், இக்குரல்கள் இறைவனையும், அனைத்துலகச் சமுதாயத்தையும் நோக்கி எழும்பும் அழுகுரல்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், சிரியாவின் தற்போதைய நெருக்கடிநிலை, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் முன்வைக்கப்படும் மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி Lakhdar Brahimi கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.