2013-08-27 15:56:00

அமெரிக்க ஐக்கிய நாடு, எகிப்துக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஆயர்கள் வலியுறுத்தல்


ஆக.,27,2013. எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு சட்டமும் மக்களாட்சியும் கொண்டுவரப்படுவதற்கு அந்நாட்டினர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக, அமெரிக்க ஐக்கிய நாடு அனைத்துலக சமுதாயத்துடன் சேர்ந்து செயல்படுமாறு கேட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
இது குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் John Kerryக்கு கடிதம் அனுப்பியுள்ள, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Richard Pates, எகிப்தில், அமைதி, மனித உரிமைகள் மற்றும் சமய சுதந்திரத்தை ஊக்குவிக்கும் உரையாடல் மற்றும் ஒப்புரவின் பாதை மேற்கொள்ளப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
எகிப்தில் இடம்பெறும் இரத்தம் சிந்தும் வன்முறைகளுக்கு மத்தியில், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள், தீவிரவாதிகளுக்குப் பலிகடாக்களாகிவருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ள ஆயர் Pates, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து அந்நாட்டில் துன்புறும் மக்களுக்காக அமெரிக்க ஆயர்களும் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாடு, எகிப்துக்கான மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை அதிகரிக்குமாறு கேட்டுள்ள ஆயர் Pates, எகிப்தின் அரசியல் குழப்பம் மற்றும் கடும் வன்முறைகளுக்கு ஏழைகளும் அப்பாவி மக்களும் பலிகடா ஆகக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : Zenit







All the contents on this site are copyrighted ©.