2013-08-24 15:52:52

ஒரிசாவில் அடக்குமுறைக்கு உள்ளான கிறிஸ்தவர்கள் மத்தியில் விசுவாசம் வளர்ந்துள்ளது, பேராயர் பார்வா


ஆக.,24,2013. ஒரிசாவின் கந்தமாலில் இடம்பெற்ற திட்டமிட்ட வன்செயல்கள், கிறிஸ்தவச் சமூகத்தின் வாழ்வையும் வீடுகளையும் புனித இடங்களையும் அழித்துள்ளன, ஆனால் அவை, அச்சமூகத்தின் விசுவாசம் மலர்ந்து வளர உதவியுள்ளன என, கட்டாக்-புபனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
கந்தமாலில் கிறிஸ்தவர்க்கெதிரான திட்டமிட்ட படுகொலைகளும் வன்செயல்களும் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி இஞ்ஞாயிறன்று நினைவுகூரப்படுவதையொட்டி ஃபீதெஸ் மற்றும் ஆசியச் செய்தி நிறுவனங்களிடம் இவ்வாறு கூறினார் பேராயர் பார்வா.
மேலும், இவ்வடக்குமுறைகள், கிறிஸ்தவர்கள் மத்தியில் இனம், மதம் என்ற வேறுபாடின்றி சகோதரத்துவ உணர்வையும் வளர்த்துள்ளன எனவும் பேராயர் தெரிவித்தார்.
மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவர்களின் வித்து என்ற திருஅவைத் தந்தை தெர்த்தூலியன் அவர்களின் புகழ்மிக்க கூற்று, கந்தமால் திருஅவையின் வளர்ச்சியில் உண்மையாகியுள்ளது என்றும் பேராயர் பார்வா கூறினார்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கந்தமாலில் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான திட்டமிட்ட வன்செயல்களில் ஏறக்குறைய 400 கிறிஸ்தவக் கிராமங்களில் 6,000த்துக்கு மேற்பட்ட வீடுகளும் 340 ஆலயங்களும் பள்ளிகளும் மருந்தகங்களும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் காயமடைந்தனர். ஓர் அருள்சகோதரி உட்பட பல பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர். ஆண்கள், பெண்கள், சிறார் என ஏறக்குறைய அறுபதாயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.

ஆதாரம் : Fides/AsiaNews







All the contents on this site are copyrighted ©.