2013-08-21 16:34:07

வாழும் ஆர்வத்தை இழந்த நான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின், வாழும் ஆர்வம் பெற்றுள்ளேன் - புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்


ஆக.21,2013. கடந்த பத்து ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழும் ஆர்வத்தை இழந்துவந்த தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின், வாழும் ஆர்வம் பெற்றுள்ளதாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் வாழும் Elena Alba என்ற 58 வயதான பெண், கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சைகளையும், கதிர் வீச்சு மருத்துவத்தையும் மேற்கொண்டு வருபவர்.
தான் உயிரோடு இருக்கும்போது, எப்படியாவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பியதால், மிகுந்த சிரமத்துடன், அருள் சகோதரிகள் சிலருடைய உதவியால் வத்திக்கானுக்கு பயணமாகி, திருத்தந்தையைச் சந்தித்தார்.
தன் நிலையைக் கண்ட திருத்தந்தை கண் கலங்கியதாகவும், அவரிடம் தான் ஸ்பானிய மொழியில் எழுதிய ஒரு மடலை அளித்ததாகவும், அம்மடலுக்கு திருத்தந்தை பதில்தர உறுதியளித்ததாகவும் Alba அவர்கள் CNA கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துத் திரும்பியதிலிருந்து தான் மன அமைதியோடும், நன்றியோடும், மகிழ்வோடும் வாழ்வதாகவும் Alba அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.