2013-08-20 16:18:18

மேற்கத்திய ஊடகங்கள் எகிப்தின் உண்மையான நிலவரத்தை உலகினருக்குத் தெரிவிக்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்


ஆக.,20,2013. எகிப்தின் அரசுக்கும் காவல்துறைக்கும் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன அந்நாட்டு காப்டிக் ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்கத் திருஅவைகள்.
இவ்விரு திருஅவைகளின் தலைவர்கள் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கைகளில், அந்நாட்டில் இடம்பெற்றுவரும் அண்மை வன்முறைகளைக் கண்டித்துள்ளதோடு அரசுக்குத் தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மேற்கத்திய ஊடகங்கள் இனவாத மோதல்களைத் தூண்டாத வகையில், எகிப்தின் உண்மையான நிலவரத்தை, நேர்மையாகவும், உண்மையாகவும், துல்லியமாகவும் உலகினருக்குத் தெரிவிக்குமாறும் அவ்விரு தலைவர்களும் கேட்டுள்ளனர்.
எகிப்தில் 58 கிறிஸ்தவ ஆலயங்களும், 160 கிறிஸ்தவக் கட்டிடங்களும் தாக்கப்பட்டிருப்பதற்கு மேற்கத்திய நாடுகளால் தவறாகப் பரப்பப்பட்ட ஊடகச் செய்திகளே காரணம் என்று சொல்லி அவற்றுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர் அத்தலைவர்கள்.
எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நிலவும் ஒன்றிப்பு மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்றுரைக்கும் அத்தலைவர்கள், இசுலாம் தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவ ஆலயங்கள், வீடுகள், கடைகள் போன்றவற்றைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும், சிறப்பாக முஸ்லீம்களுக்குத் தங்களின் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.