2013-08-20 16:19:36

தாய்லாந்து மூத்த புத்தமத ஆதீனத் தலைவர் இறப்புக்கு வத்திக்கான் அனுதாபச் செய்தி


ஆக.,20,2013. தாய்லாந்தில் மூத்த புத்தமத ஆதீனத் தலைவர் Somdej Phra Buddhacharn அவர்களின் மரணத்தையொட்டி அனுதாபச் செய்தியை அனுப்பியுள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை.
திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean Louis Tauran அவர்கள், பாங்காக்கிலுள்ள திருப்பீடத் தூதரகத்தின் வழியாக அனுப்பிய இச்செய்தியில், மிகவும் மதிப்புக்குரியவராக விளங்கிய Buddhacharn அவர்களின் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்திருப்பதோடு, கத்தோலிக்கருக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் உரையாடல் தொடரும் என்ற தனது நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்து ஆயர் பேரவையின் உதவிச் செயலரும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் முன்னாள் நேரடிப் பொதுச் செயலருமான ஆயர் Andrew Vissanu Thanya Anan அவர்கள், தாய்லாந்து ஆயர் பேரவை சார்பில் Buddhacharn அவர்களின் அடக்கச் சடங்கில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தமத அடக்கச்சடங்கு, இறந்த உடலைக் குளிப்பாட்டும் சடங்கு தொடங்கி பல நாள்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தமத அடக்கச்சடங்கில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் இறந்தவரின் கையில் தண்ணீர் ஊற்றுவார்கள், பின்னர் அவ்வுடல் பெட்டியில் வைக்கப்படும், புத்தமதப் பாடல்களும் செபங்களும் செபிக்கப்படும், இறந்தவர் பெயரில் உணவு பரிமாறப்படும், பின்னர் அவ்வுடல் ஒரு வாரம் அல்லது பல மாதங்கள் கழித்து எரிக்கப்படும்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.