2013-08-20 16:13:24

எகிப்தில் இடம்பெறும் கிறிஸ்தவர்கெதிரான வன்முறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது - கர்தினால் சாந்திரி


ஆக.,20,2013. எகிப்தில் இடம்பெற்றுவரும் கடும் வன்முறைகளுக்கு, உரையாடலும் ஒப்புரவுமே, இயலக்கூடிய உண்மையான ஒரே தீர்வு என்று திருப்பீட கீழை வழிபாட்டுமுறைப் பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி அவர்கள் கூறினார்.
எகிப்தின் அனைத்துக் கிறிஸ்தவத் தலைவர்களுடனும் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள கர்தினால் சாந்திரி அவர்கள், எகிப்தில் துன்புறும் மக்களுக்காக நாம் கண்ணீருடன் கடவுளைப் பிரார்த்திப்போம் என்றும் கூறியுள்ளார்.
எகிப்துக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து அழைப்புவிடுத்துவரும்வேளை, அந்நாட்டின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் சாந்திரி அவர்கள், எகிப்தில் ஆலயங்கள் அழிக்கப்பட்டிருப்பதும் கிறிஸ்தவர்கள் துன்புறுவதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
எகிப்தில் சிறுபான்மையினராக இருக்கும் கத்தோலிக்கர் குறித்து கவலை தெரிவித்துள்ள கர்தினால் சாந்திரி அவர்கள், சமய சுதந்திரமும், மனித மாண்பும், அனைத்து மதத்தினரும் ஒருவரையொருவர் மதிக்கவும் வேண்டுமெனக் கேட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.