2013-08-19 15:54:48

வாரம் ஓர் அலசல் – துணிந்தவர் தோற்றதில்லை


ஆக.,19,2013. RealAudioMP3 தீ, அது உறங்கும்வரை அமைதியாக இருக்கும். ஆனால் அது எதனோடும் உரசிவிட்டால், அய்யோ, அதனால் ஏற்படும் பேராபத்துக்கள் சொல்லுக்குள் அடங்காதவை. இந்தத் தீ ஐரோப்பாவில் இந்தக் கோடை காலத்தில் சில காடுகளைப் பற்றி எரியச் செய்துள்ளது. அதேசமயம் இந்நாள்களில் எகிப்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் மனங்களில் பகைமையும் வெறுப்பும் நிறைந்த தீயும் பற்றி எரிந்து வருகிறது. எகிப்து, குண்டுவெடிப்புக்களாலும், ஆயுதத் தாக்குதல்களாலும் பற்றியெரிந்து கொண்டிருக்கின்றது. கடந்த ஜூலை 3ம் தேதி எகிப்திய அரசுத்தலைவர் முகமது மோர்சி ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்களான முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பினர் கோபத் தீயைக் கொப்பளித்துக் கொண்டிருக்கின்றனர். இஞ்ஞாயிறு ஊடகங்கள் வெளியிட்ட செய்திப்படி, எகிப்தில் நடக்கும் வன்முறைகளில் கடந்த மூன்று நாள்களில் மட்டும், குறைந்தது 58 கிறிஸ்தவ ஆலயங்கள், கிறிஸ்தவ மருத்துவமனைகள், துறவு இல்லங்கள், நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள் மற்றும் வீடுகள், தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன அல்லது சூறையாடப்பட்டுள்ளன. அந்நாட்டின் சீனாய்த் தீபகற்பத்தின் Rafahயில் குறைந்தது 24 காவல்துறையினர் இத்திங்களன்று ஆயுதக் குழுவினரால் கொல்லப்பட்டுள்ளனர். வெறித்தனமும் கடுஞ்சினமும் மனிதத்தை இழக்க வைத்துள்ளன. இஞ்ஞாயிறு மூவேளை உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தில் அமைதி நிலவ, அமைதியின் அரசியாம் மரியிடம் நாம் அனைவரும் செபிப்போம் என்று கூறிச் செபித்தார். கடந்த நான்கு நாள்களில் மூன்றாவது தடவையாக இவ்வாறு எகிப்துக்காகச் செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
RealAudioMP3 சிரியாவில் இந்தப் பகைமைத் தீ, ஈராண்டுகளுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த வியாழன் முதல் சனிக்கிழமைவரை மட்டும் இருபதாயிரம் பேர்வரை ஈராக்கின் Kurdistan எல்லைக்குள் வந்துள்ளனர் என்று ஐ.நா. அகதிகள் நிறுவனம் அறிவித்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை உரையில் கூறியிருப்பதுபோல, விசுவாசம் என்பது தீமையையும் தன்னலத்தையும் புறக்கணித்து, நன்மை, உண்மை, நீதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதாகும். இதற்குத் தியாகங்களும் ஒருவர் தனது சொந்த ஆதாயங்களைத் துறப்பதும்கூட தேவைப்படுகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இக்கூற்று எந்த ஒரு மதநம்பிக்கையாளருக்கும் பொருந்தும். குண்டுவெடிப்புக்களாகவும், ஆயுதத் தாக்குதல்களாகவும் வெளிப்படும் வன்முறைகள் மனிதரின் மனங்களில் எரியும் பகைமைத் தீயின் வெளிப்பாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் பகைமைத் தீயை அன்பு, கருணை, மன்னிப்பு, மனிதாபிமானம், ஒப்புரவு போன்ற விழுமியங்களால் மட்டும்தான் அணைக்க முடியும்.
ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி வைக்கப்பட்ட வெடிகுண்டுக்கு, அங்கு மனிதாபிமானப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ஐ.நா.பொதுச்செயலரின் சிறப்புப் பிரதிநிதி Sergio Vieira de Melloவும், அவருடன் பணி செய்த 21 பேரும் பலியாகினர். இந்த ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்ட இந்த நாளை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதியை அனைத்துலக மனிதாபிமான நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை 2008ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியன்று ஐ.நா.பொது அவை நிறைவேற்றியது. ‘இந்த உலகுக்கு மேலும் தேவைப்படுகின்றது’(The World needs more…) என்ற தலைப்பில் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட இந்த நாளுக்கெனச் செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், இந்த நாளில் ஏதாவது ஒரு சிறிய மனிதாபிமானச் செயல்மூலம் பிறருக்கு உதவி செய்யவும், பிறருக்குத் தூண்டுகோலாக இருக்கவும், இவ்வுலகை மேலும் சிறந்ததாக ஆக்கவும், நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவும் வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
RealAudioMP3 மனிதாபிமானம் தேவை என்று ஆங்காங்கே குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்போதே, மனிதமற்ற செயல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இம்மாதம் 10ம் தேதி, பிரிட்டனின் West Midlands மாநிலத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் குடிபோதையில் 80 வயது சீக்கியர் ஒருவரை நடுரோட்டில் தாக்கித் தள்ளிவிட்டு முகத்தில் காறித் துப்பியிருக்கிறார். இக்காட்சியை இச்சனிக்கிழமையன்று இணையதளத்தில் பார்த்துபோது அதிர்ச்சியாக இருந்தது. மேலும், இச்சனிக்கிழமையன்று மற்றுமொரு மனிதமற்ற ஒரு வீடியோவையும் இணையதளத்தில் பார்க்க நேர்ந்தது. சீருடை அணிந்த மூன்று அலுவலகர்கள், ஒரு பெரிய பள்ளத்தில் 10 அல்லது 15 இளைஞர்களை நிர்வாணமாக போட்டு அவர்களை உயிரோடு புதைத்துக் கொண்டிருந்தனர். அந்த வீடியோ படத்தில் ஒலித்த இசையை வைத்து அது எங்கு நடந்திருக்கும் என்பதை யூகிக்கவும் முடிந்தது.
ஆயினும் அன்பர்களே, இந்த உலகில் மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதற்கு கடந்த வாரத்தில் நாம் பார்த்த சில வீடியோக் காட்சிகள் சான்றுகள். இவை மனிதாபிமானச் செயல்களைச் செய்ய நம்மையும் தூண்டுகின்றன. ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் தனது சபை உறுப்பினர் ஒருவருக்கு தனது சிறுநீரகம் ஒன்றைத் தானமாக வழங்கியுள்ளார். ஒருவரையொருவர் அறியாத இரு மனைவிகள், தங்களின் கணவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு, தங்களின் சிறுநீரகங்ளை அடுத்தவரின் கணவருக்கு மாறி மாறிக் கொடுத்து இரு கணவர்களையும் காப்பாற்றியுள்ளனர். இச்சனிக்கிழமையன்று வெளியான மேலும் சில ஊடகச் செய்திகள் இதோ...
இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலவும் பதட்டத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 367 இந்திய மீனவர்களை, பாகிஸ்தான் விடுவிக்க இருப்பதாக, வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் அறிவித்தார்.
இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்த, தமிழக மீனவர்கள், எட்டுப் பேரை விடுவிக்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததற்காக, ஜூன் 16ம் தேதியன்று தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் எட்டுப்பேரை விடுவிக்கும்படி, மன்னார் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள 41 பேரின் காவலை, வரும் 22ம்தேதி வரை நீட்டிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில் புரட்சிக்குழுவினால் கடத்தப்பட்டுள்ள சிறாரில், எட்டு வயதுச் சிறார் உட்பட எண்பதுக்கும் அதிகமான சிறாரை ஐ.நா. மீட்புக்குழு ஒன்று காப்பாற்றியுள்ளது. காங்கோவின் கடங்கா மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களில் 13 சிறுமிகள் உட்பட பல ஏழைச்சிறார் வலுக்கட்டாயமாகப் புரட்சிக் குழுவினரால் கடத்தப்பட்டு படைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இஞ்ஞாயிறன்று வெளியான ஒரு செய்திகூட மனிதாபிமான உணர்வை உயர்த்திக் காட்டுகிறது. 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டுவரை நடந்த கொரியப் போருக்குப் பின்னர், கொரியத் தீபகற்பம் இரண்டாகப் பிளவுபட்டபோது பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சேருவதற்கு தென் கொரியா முன்வைத்த பரிந்துரைக்கு வட கொரியா இசைவு தெரிவித்துள்ளது என பிபிசியில் செய்தி வெளியாகி இருந்தது. வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே தொடர்ந்து பதட்டநிலைகள் இருந்துவரும் நிலையில், இச்செயல் இவ்விரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை நீக்கும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது. வடகொரியாவின் சுற்றுலா மையமொன்றில் வரும் செப்டம்பர் 19ம் தேதி இந்த மனிதாபிமானச் செயல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் செய்ததாக ஒரு விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ள மனிதாபிமானச் செயலை யு டியுப்பில் பார்க்க நேர்ந்தது. அன்று மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு பெரிய மரம் அடியோடு சாய்ந்து சாலையை அடைத்துவிட்டது. அதனால் சிறிய, பெரிய வாகனங்கள் எல்லாம் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் வண்டிகளை நிறுத்திவிட்டு செய்வதறியாது நின்று கொண்டிருந்தன. அந்த நேரம் அப்பக்கம் மழையில் நனைந்து கொண்டுவந்த பள்ளிச் சீருடை அணிந்த அந்தச் சிறுவன் அந்த இடத்தின் நிலைமையைப் புரிந்து கொண்டு, உடனே ஓடி தனது பலம் கொண்ட மட்டும் அந்த மரத்தைக் கையால் தள்ளுகிறான். அது இம்மிகூட நகரவில்லை. ஏனெனில் அது அவ்வளவு பெரிய மரம். உடனே அங்கு உணவுப்பொருள்கள் விற்றுக்கொண்டிருந்த மற்ற சிறாரும் இந்தச் சிறுவனோடு சேர்ந்து அந்த மரத்தைத் தள்ளுகின்றனர். ஆனாலும் முடியவில்லை. இதைக் கவனித்துக்கொண்டு இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அமர்ந்திருந்த வயது வந்தவர்கள் அனைவரும் வந்து தள்ளினர். மரம் நகர்ந்தது. போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
அன்பு நேயர்களே, பாட விரும்புவர்க்கு ஒரு பாடல் எப்போதும் தயாராக இருக்கும் என்பதைப்போன்று, மனிதாபிமானச் செயல்கள் செய்ய மனம் விரும்புவோர்க்கு அவற்றைச் செய்யும் வாய்ப்புகள் எப்போதும் கிடைக்கின்றன. நான் என்ன மனிதாபிமான, பிறரன்புச் செயல் செய்யலாம் என நீங்கள் சிந்தித்தால் இதோ சில பரிந்துரைகள்....
மருத்துவமனையில் தனிமையில் இருப்போரைச் சந்திக்கலாம், தனித்துவாழும் முதியோருக்கு உதவலாம், இரத்த தானம், உடல்தானம் செய்யலாம், ஏழைச் சிறாருக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம், வீடற்றவர்க்கு ஒருவேளை உணவு கொடுக்கலாம், சேவை நிறுவனங்களுக்கு உதவி செய்யலாம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவலாம், பிறர் மனிதம் கெடும் அளவுக்கு அவரைப் பழித்துரைக்காமல், இழிவாகப் பேசாமல் இருக்கலாம், பிறருக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெடுதி செய்யாமலாவது இருக்கலாம்... பிறர் நல்லது செய்யும்போது மனதாரப் பாராட்டலாம்... நீதியற்ற மற்றும் தீய செயல்களுக்குத் துணை போகாமல் இருக்கலாம்... இப்படி பல வழிகள் உள்ளன. சிந்திப்போம்.
துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை என்ற கூற்றுத்தான் இந்த அனைத்துலக மனிதாபிமான நாளில் நினைவுக்கு வருகிறது. மனிதம் நிறைந்த செயல்களைத் துணிந்து செய்தவர்கள், எரிந்து விரியும் சுடரில், தியாகச் சுடர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அன்பர்களே, வாணிநாதன் என்பவர் எழுதியிருப்பது போல, உங்களால் தீபங்கள் எரியும் என்றால் நீங்கள் தீக்குச்சிகளாய் இருப்பதில் ஆனந்தப்படுங்கள். இளையோரே, நீங்கள் பருவ நெருப்பில் காய்ச்சிய வாள்கள். உங்கள் புருவ நெருப்பில் பூகம்பங்கள் இமையைத் திறந்தால் சூர்யோதயங்கள்தான் (துரை மணிகண்டன்) என்பதை மறவாது துணிந்து மனிதம் போற்றும் செயல்களைச் செய்யுங்கள்.
மனிதாபிமானச் செயல்களைத் துணிந்து செய்யும் எல்லாருக்கும் வத்திக்கான் வானொலியின் நல்வாழ்த்துக்கள். தனது மனிதம்போன்று பிறர் மனிதம் காப்போம்.







All the contents on this site are copyrighted ©.