2013-08-17 15:58:02

நீதி ஞாயிறு : அமைதிக்கு வழிவிடும் செயல்களில் ஈடுபட இந்தியருக்கு அழைப்பு


ஆக.,17,2013. உண்மையில் உருவாக்கப்பட்டு, நீதியில் கட்டப்பட்டு, பிறரன்பால் வழிநடத்தப்பட்டு, சுதந்திரத்தின்கீழ் செயல்படும் இடமாக இவ்வுலகை மாற்றுவதற்கு, நீதி ஞாயிறன்று இந்தியர்கள் உறுதி எடுக்குமாறு கேட்டுள்ளது இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம்.
ஆகஸ்ட் 18, இஞ்ஞாயிறன்று இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் 30வது நீதி ஞாயிறை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள இவ்வாணையம், உலகில் ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும், ஐ.நா. ஆயுத வியாபார உடன்பாட்டிலிருந்து விலகியிருக்கும் 24 நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயுதப் போட்டி, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏழைகள் புறக்கணிக்கப்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப வன்முறை, மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தியத் திருஅவை அக்கறை கொண்டுள்ளது என்றும் அச்செய்தி கூறுகிறது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 1963ம் ஆண்டில் வெளியிட்ட ‘அவனியில் அமைதி’(Pacem in Terris) என்ற திருமடலின் 50ம் ஆண்டின் நினைவாக இந்தியத் திருஅவை, இந்த நீதி ஞாயிறுக்குரிய தலைப்பைத் தேர்ந்தெடுத்து சிறப்பிக்கிறது என்று இவ்வாணையம் கூறியுள்ளது.
30வது நீதி ஞாயிறுக்கென இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் அவ்வாணையத் தலைவர் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ், அதன் உறுப்பினர் ஆயர்கள் Mathew Arackal, Gerald Almeida, இன்னும் அதன் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : CBCI







All the contents on this site are copyrighted ©.